கண்டியை வீழ்த்தியது திசர பெரேராவின் கொழும்பு அணி!

Monday, May 7th, 2018

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் கண்டி அணியை வீழ்த்திய கொழும்பு அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு தம்புள்ளை அணியை வீழ்த்தி காலி அணி முதல் வெற்றியை பெற்றது.

கொழும்பு எதிர் கண்டி

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரியவின் சதம் மற்றும் பந்துவீச்சில் லக்ஷான் மதுசங்க விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் அஞ்செலோ மெதிவ்ஸின் கண்டி அணியை திசர பெரேரா தலைமையிலான கொழும்பு அணி 58 ஓட்டங்களால் வீழ்த்தியது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கொழும்பு அணி 63 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முதல் போட்டியில் சதம் பெற்ற லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 2 ஓட்டங்களுடனும் துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெஹான் ஜயசூரிய மற்றும் அனுபவ வீரர் சாமர சில்வா 163 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு அணியை வலுப்பெறச் செய்தனர்.

சாமர சில்வா 90 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தபோதும், மறுமுனையில் ஷெஹான் ஜயசூரிய A நிலை போட்டிகளில் தனது 6 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

100 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 11 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 110 ஓட்டங்களைப் பெற்றார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இலங்கை அணியில் இடம் கிடைக்காதபோதும் 26 வயதான ஷெஹான் ஜயசூரிய உள்ளூர் மட்ட போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவரதும் சிறப்பாட்டத்தின் மூலம் கொழும்பு அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 299 ஓட்டங்களை பெற்றது.

கண்டி அணி சார்பாக பந்துவீச்சில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 300 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபித்தபோதும் மத்திய வரிசை ஆட்டம் கண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல 62 பந்துகளில் 60 ஓட்டங்களையும் முதல் வரிசையில் வந்த மஹேல உடவத்த 74 பந்துகளில் 71 ஓட்டங்களையும் பெற கண்டி அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை தாண்டி இருந்தது.

எனினும் மத்திய வரிசையில் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 27 ஓட்டங்களுடனும் அடுத்து வந்த வீரர்கள் நின்றுபிடிக்காமல் விக்கெட்டுகளை பறிகொடுக்க கண்டி அணி 241 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணி கடைசி 5 விக்கெட்டுகளையும் வெறுமனே 15 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற ஷெஹான் ஜயசூரிய தனது சுழல் மூலம் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு லக்ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

Related posts: