ஓவல் டெஸ்டிலும் இந்திய அணி தோல்வி!

Wednesday, September 12th, 2018

இந்திய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ஓட்டங்களும், இந்திய அணி 292 ஓட்டங்களும் எடுத்தன.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்து, இந்திய அணி வெற்றிபெற 464 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது.

இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ராகுல் 46 ஓட்டங்களுடனும் ரஹானே 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி 2 ஓட்டங்கள் சேர்ப்பதற்குள் தவான், புஜாரா மற்றும் அணித்தலைவர் கோஹ்லி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

முந்தைய நாள் ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாக எதிர்க்கொண்ட ரஹானே, 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ராகுல் – ரஹானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் விஹாரி, 6 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ராகுலுடன் கைகோத்த ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினார்.

இங்கிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி 6 வது விக்கெட்டுக்கு 207 ஓட்டங்கள் சேர்த்தது.

ராகுல் 149 ஓட்டங்களுடனும், பண்ட் 114 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

94.3 ஒவர்களில் 345 ஓட்டங்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்ட் போட்டியிலும் வென்று 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ் மற்றும் குர்ரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெஸ்டர் குக், இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: