ஐ.பி.எல்.தொடர்: அடுத்த சுற்றில் நுழைய 6 அணிகள் போராட்டம்!

Wednesday, May 18th, 2016

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப், புனே இழந்துள்ள நிலையில், எஞ்சிய 6 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

9-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 49 ஆட்டம் முடிந்துள்ள நிலையில் இன்னும் 7 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை உறுதியாக இறுதி செய்யவில்லை. டோனி தலைமையிலான ரைசிங் புனே, முரளிவிஜய் தலைமையிலான கிங்ஸ் லெவன் ஆகிய 2 அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.

வார்னரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ், ஜாகீர்கானின் டெல்லி டேர்டெவில்ஸ், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 6 அணிகள் போட்டியில் உள்ளன. இதில் 4 அணிகள் தகுதி பெறும். ஒவ்வொரு அணிக்கும் உள்ள வாய்ப்பு விவரம்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: இந்த அணி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளன. இன்னும் 2 ஆட்டத்தில் மோத வேண்டும். டெல்லியை 20–ந்திகதியும், கொல்கத்தாவை 22–ந் திகதியும் சந்திக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் வென்றாலே அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு நுழைந்துவிடும். இரண்டு ஆட்டத்தில் தோற்றால் மற்ற அணியின் முடிவை பொறுத்து அமையும். அந்த நேரத்தில் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தில் இருக்கிறது. ரன்ரேட்டில் தற்போது மும்பை, குஜராத்தை விட அதிகமாக இருக்கிறது. குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். இதில் இரண்டு ஆட்டத்தில் வென்றால் உறுதியாக நுழையும். ஒன்றில் வென்றால் ரன்ரேட் அவசியம்.

மும்பை இந்தியன்ஸ்: மும்பை இந்தியன்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3–வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத் லயன்சை 21– ந்திகதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இதில் தோற்றால் அந்த அணி ‘பிளேஆப்’ வாய்ப்பை இழக்கும்.

குஜராத் லயன்ஸ்: 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4–வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது. கொல்கத்தாவை 19– ந்திகதியும், மும்பையை 21– ந்திகதியும் எதிர்கொள்கின்றன. இந்த இரண்டிலும் வெற்றி பெற போராடும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: பெங்களூர் அணி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சிய 2 ஆட்டத்தில் (பஞ்சாப், டெல்லி) அந்த அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இதில் ஒரு ஆட்டத்தில் தோற்றாலே அந்த அணி வாய்ப்பை இழந்துவிடும்.

டெல்லி டேர்டெவில்ஸ்: டெல்லி அணி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி புனேயை இன்றும், ஐதராபாத்தை 20– ந்திகதியும் பெங்களூரை 22– ந்திகதியும் சந்திக்கின்றன. இதில் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மிகப்பெரிய வெற்றியாக இருக்க வேண்டும். இரண்டு ஆட்டத்தில் தோற்றால் வாய்ப்பை இழக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: