ஐபிஎல் போட்டிக்கு புதிய சிக்கல்!

Wednesday, April 6th, 2016

ஐபிஎல் போட்டிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

9வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி தொடங்கி மே 29ம் திகதி வரை நடக்கிறது.இந்த ஐபிஎல் தொடரில் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் மட்டும் 19 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் மராட்டியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் போட்டிகளை இங்கு நடத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “மராட்டியத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. ஐபிஎல் போட்டிக்காக மைதானத்தை பராமரிக்க 60 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகிறது.

இந்த நிலையில் இங்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் தண்ணீர் பஞ்சம் இன்னும் தீவிரம் அடையும். எனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலங்களில் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படாது என்றும் திட்டமிட்டபடி அங்கு நடைபெறும் எனவும் ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

மேலும், வறட்சியால் நிலவும் தண்ணீர் பிரச்சனையை பொறுத்தவரை மராட்டிய மாநில விவசாயிகளுடன் நாங்கள் இருக்கிறோம், எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: