தொடரை இழந்தது இந்திய அணி!

Tuesday, March 3rd, 2020

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் தோற்று ‘வயிட் வொஷ்’ ஆனது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி 3 தினங்களிலேயே முடிந்து விட்டது.

இந்த 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு முறைதான் 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது. 3 தடவை 200 ஓட்டங்களுக்கு குறைவாக எடுத்தது. முதல் டெஸ்டில் 165 மற்றும் 191 ஓட்டங்களிலும், 2 வது டெஸ்டில் 2 வது இன்னிங்சில் 124 ஓட்டங்களிலும் சுருண்டு இருந்தது. அந்த அளவுக்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள்.

விராட்கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ‘வயிட் வொஷ் ’ ஆகியுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. கடைசியாக 2011-2012-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் 4 டெஸ்டிலும் தோற்று ‘வயிட் வொஷ் ’ ஆகி இருந்தது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சந்தித்த 2-வது தோல்வியாகும்.

இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்வி, 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 296 புள்ளியுடன் 2 வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளியுடன் 3 வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளியுடன் 4 வது இடத்திலும் பாகிஸ்தான் 140 புள்ளியுடன் 5 வது இடத்திலும் உள்ளன.

இலங்கை (80), தென் ஆப்பிரிக்கா (24), மேற்கிந்திய தீவுகள் (0), பங்காளதேஷ் (0) ஆகிய அணிகள் 6 முதல் 9 வது இடங்களில் உள்ளன.

Related posts: