ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நடால் தோல்வி!

Tuesday, September 6th, 2016

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டித் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் 4ஆவது சுற்றில் ஸ்பெய்னின் ரபேல் நடால்,தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

உலகின் 25ஆம் நிலை வீரரான பிரான்ஸின் லூகாஸ் போய்லேயை எதிர்கொண்ட நடால், 1-6, 6-2, 4-6, 6-3, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 11ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ வில்பிரட் சொங்கா, 12ஆம் நிலை வீரரான பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸ் ஆகியோர், தங்களது 4ஆவது சுற்றுப் போட்டிகளில் வென்று, காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினர்.

பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், 2ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 16ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவாவை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முன்னேறினார்.

இதன்மூலம், உலகின் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், தனது முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டுமாயின், இத்தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேற வேண்டும் என்ற நிலைமையை அவர் ஏற்படுத்தியுள்ளார். தவிர, 8ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் றொபேர்ட்டா வின்சியும், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

எனினும், 9ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மடிசன் கீய்ஸ், டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கியிடமும் 14ஆம் நிலை வீராங்கனையான பிரித்தானியாவின் ஜொஹன்ன கொன்டா, லட்வியாவின் அனஸ்தேஸிஜா செவஸ்டோவாவிடமும் தோல்வியடைந்து வெளியேறினர்.

Chile-open-tennis-nadal

Related posts: