எகிப்து அணியை வென்றது உருகுவே!

Saturday, June 16th, 2018

எகிப்து அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கடைசி நிமிடத்தில் ஜோஸ் ஜிமினஸ் கோலடித்து கைகொடுக்க உருகுவே அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரஷ்யாவில் 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று எகடரின்பர்க் நகரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் உலகின் ‘நம்பர்–14’ உருகுவே அணி 45வது இடத்தில் உள்ள எகிப்தை எதிர்கொண்டது.

துவக்கத்தில் இருந்து இரு அணியினரும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் உருகுவேயின் லுாயிஸ் சாரஸ்இ பந்தை கோல் போஸ்ட்டுக்கு இடதுபுறமாக வெளியே அனுப்பி  கோலடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். எகிப்து அணியின் கோலடிக்கும் வாய்ப்பை உருகுவே கோல்கீப்பர் பெர்ணான்டோ மஸ்லேரா சாமர்த்தியமாக தடுத்தார். முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் 47வது நிமிடத்தில் கவானி ‘பாஸ்’ செய்த பந்தை பெற்ற உருகுவேயின் சாரஸ்  கோலடிக்க முயற்சித்தார். ஆனால் எகிப்து கோல்கீப்பர் எல்–ஷெனாவி அருமையாக தடுத்தார். இதேபோல 73  83வது நிமிடத்திலும் எகிப்து கோல்கீப்பர் எல்–ஷெனாவி  ‘டைவ்’ அடித்து பந்தை தடுக்க உருகுவேயின் கோல் வாய்ப்பு வீணானது.  ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் கவானி துாக்கி அடித்த பந்தை கோல்போஸ்டில் பட்டுத் திரும்பியது. பின்  90வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பில் கார்லஸ் சான்செஸ் துாக்கி அடித்த பந்தை ஜோஸ் ஜிமினஸ் தலையால் முட்டி கோல் அடித்து  உருகுவே ரசிகர்களை உருக வைத்தார். இதற்கு எகிப்து அணியினரால் பதிலடி தர முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் உருகுவே அணி  1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

48 ஆண்டுகளுக்கு பின்…

கடந்த 1930, 50, 54, 62, 66, 70ல் நடந்த உலக கோப்பை தொடரில் உருகுவே அணி விளையாடிய முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்திக்கவே இல்லை. கடந்த 1974, 86, 90, 92, 2010, 2014ல் நடந்த உலக கோப்பை தொடரில் உருகுவே அணி விளையாடிய முதல் லீக் போட்டியில் வெற்றி பெறவில்லை. நேற்று எகிப்தை வீழ்த்தியதன்மூலம்  48 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை தொடரில் உருகுவே அணி விளையாடிய முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றது.

Related posts: