உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

Saturday, July 7th, 2018

உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது முன்னாள் சாம்பியன் பிரான்ஸ்.
பிரான்ஸ் – உருகுவே அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை காலிறுதி ஆட்டம் நேற்று இரவு நோவ்கோகிராட் நிஷ்னி மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் ஏற்கனவே மோதிய 8 ஆட்டங்களில் பிரான்ஸ் ஒரு முறை தான் வென்றது. உலகக் கோப்பையிலும் உருகுவே ஒரு முறை வென்றது. மற்றொரு ஆட்டம் டிரா ஆனது. அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கான ஆட்டம் ஆதலால் துவக்கம் முதலே இரு அணிகளின் முன்கள வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இரு அணிகளின் கோலடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதனிடையே 40-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிரைஸ்மேன் ப்ரீகிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை, அதன் தற்காப்பு வீரர் ரஃபேல் வரேன் தலையில் முட்டி பிசகின்றி கோலாக்கினார். இதனால் முதல் பாதி நிறைவில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் உருகுவே வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முனைந்தனர்.
ஆனால் அதை தங்களது சிறப்பான ஆட்டத்தால் பிரான்ஸ் வீரர்கள் தடுத்தனர். இதற்கிடையே 61-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் டொலிஸா கடத்தி அனுப்பிய பந்தை முன்கள வீரர் கிரைஸ்மேன் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 2-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.
பின்னர் பிரான்ஸ் வீரர் மாப்பேவை உருகுவே வீரர் டிகோ கோடின் தள்ளி விட்டதால் இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. அதனை நடுவர்கள் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தினர். அதன் பின்னர் கோலடிக்க உருகுவே அணியின் வீரர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இறுதியில் 2-0 என உருகுவேயை எளிதாக வென்றது பிரான்ஸ். இந்த வெற்றி மூலம் 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பை பிரான்ஸ் தக்க வைத்துள்ளது.

Related posts: