உலகக் கோப்பை சாம்பியன்: பிரான்ஸ் உற்சாக கொண்டாட்டம்!

Tuesday, July 17th, 2018

உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன பட்டத்தை இரண்டாம் முறையாக பிரான்ஸ் அணி வென்றதை அடுத்து அந்நாட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணியை வென்று பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்பு அந்த அணி 1998-இல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் பட்டம் வென்றதால் அந்நாட்டு பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்துள்ளனர்.

தலைநகர் பாரீஸ் முக்கிய இடமான சாம்ப் எல்ஸி அவென்யூ பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் குவித்து உற்சாகமாக கொண்டாடினர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், வாணவேடிக்கை என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

கால்பந்து வெற்றி நாட்டின் அனைத்து தரப்பினரையும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல், மிரட்டல், பொருளாதார பிரச்னை என பல வகைகளில் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் உலகக் கோப்பை வெற்றியால் அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளோம் என பாரிஸ் புறநகர் பகுதியான போண்டியைச் சேர்ந்த ஜாப்பரி கூறியுள்ளார்.

நகரின் பிரதான அடையாளமான ஈபில் கோபுரம் தேசிய கொடி நிறத்தால் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. அதே போல் நெப்போலியன் வளைவும் தேசிய நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு, வெற்றி அணியில் இடம் பெற்ற வீரர்களின் படங்களும் பிரதிபலித்தன.

சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்ற மாப்பேவின் சொந்த ஊரான போண்டியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடர் கலவரங்கள் நடந்தன. இதன் மூலம் அங்குள்ள பிரிவினை வெளிப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய வெற்றி அதையெல்லாம் மறக்கச் செய்து விட்டது.

அதே நேரத்தில் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடைபெற்ற போது, சில இளைஞர்கள் கடைகளை உடைத்து பொருள்களை சூறையாடி திருடிச் சென்றனர். அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். மொத்தம் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேசிய கொடி நிறத்தில் மின்னாளி அலங்காரம் செய்யப்பட்ட ஈபில் கோபுரம். பார்வையாளர்களை கவர்ந்த குரோஷிய அதிபர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த ஒருவர் என்றால் அவர் குரோஷிய அதிபர் கொலிந்தா கிராபர் கிடாரோவிக்.

இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் 4-2 என குரோஷியா தோல்வியடைந்தது. இந்நிலையில் பரிசளிப்பு விழாவின் போது, சோகத்தையும் வெளிக்காட்டாமல், அதிபர் கொலிந்தா தனது நாட்டு கேப்டன் மொட்ரிக் உள்பட அனைத்து வீரர்களையும் அணைத்து ஆறுதல் கூறியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது.

தனது நாட்டு அணியின் சீருடையுடன் வந்திருந்த கொலிந்தா உலகக் கோப்பையில் குரோஷிய அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் பார்வையிட்டார். மேலும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்து மாஸ்கோவுக்கு வந்த கொலிந்தா இந்த உலகக் கோப்பையில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து சாம்பியன் ஆகியுள்ளார் என சமூகவலை தளங்களில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றாலும், குரோஷியா இதயங்களை வென்றது எனவும் கூறியுள்ளனர்.

Related posts: