உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – தென்னாபிரிக்காவுடன் போராடித் தோற்றது இலங்கை!

Sunday, October 8th, 2023

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், ராஸ்ஸி வென் டெர் டுசென் 108 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 100 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்மூலம், எய்டன் மார்க்ரம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 03ஆவது சதத்தையும், ராஸ்ஸி வென் டெர் டுசென் 05ஆவது சதத்தையும், குயின்டன் டி கொக் 18ஆவது சதத்தையும் கடந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின், தில்ஷான் மதுஷங்க 86 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 90 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 23 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், 429 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலங்க 79 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 76 ஓட்டங்களையும், தசுன் ஷானக்க 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் ஜெரால்ட் கோட்ஸி 68 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Related posts: