உலகக் கிண்ணத்தொடர் – இந்தியா 125 ஓட்டங்களால் வெற்றி!

Friday, June 28th, 2019

உலகக்கிண்ணக் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதும் உலகக்கிண்ணம் தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டம் தெரிவு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா 18 ஓட்டங்களிலும், லோகேஷ் ராகுல் 48 ஓட்டங்களிலும், விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) என சொற்ப ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அரைசதம் அடித்த விராட் கோஹ்லி 82 பந்தில் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் எம்.எஸ்.டோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ஓட்டங்கள் சேர்க்க இந்தியா 250 ஓட்டங்களைத் தாண்டியது.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் சேர்த்துள்ளது. டோனி 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கு இந்திய அணி சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து, மேற்கிந்திய அணி 269 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் மேற்கிந்திய அணியினர் ஓட்டங்கள் குவிக்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ஓட்டங்களும், நிகோலஸ் பூரன் 28 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் மேற்கிந்திய அணி 34.2 ஓவரில் 143 ஓட்டங்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து, இந்தியா 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தி மேற்கிந்திய கோட்டையை சல்லி சல்லியாக நொறுக்கினர்.

Related posts: