உலகக்கிண்ணம் வெல்லப் போவது யார்?

Sunday, April 3rd, 2016

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் கடந்த மாதம் 8ஆம் திகதி தொடங்கிய டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த 30ம் திகதி நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், 31ம் திகதி நடந்த 2வது அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவையும் வீழ்த்தின.

இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டும், மேற்கிந்திய தீவுகள் அணி 2012ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி உலகக்கிண்ணத்தை 2வது முறையாக கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெறும்.

பலம் வாய்ந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வதால் கிண்ணத்திற்கான மகாயுத்தமாக இந்தப் போட்டி இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இங்கிலாந்து அணியில் ஜோரூட், ஜேசன்ராய், ஹால்ஸ், பட்லர், ஸ்டோக்ஸ், மொய்ன் அலி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அந்த அணி ‘லீக்’ ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்றிருந்தது. இதனால் இதற்கு பதிலடி கொடுத்து கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

அதேசமயம் தொடர் முழுவதும் அசத்தி வந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆப்கான் அணியுடன் மட்டும் தோற்றது. இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தியதால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

அந்த அணியில் கணிக்க முடியாத பல அதிரடி சூரர்கள் இருக்கின்றனர். கிறிஸ் கெய்ல், சார்லஸ், லெண்டில் சிம்மன்ஸ், சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸல், பிராவோ, டேரன் சமி போன்றோர் அதிரடி காட்ட தயாராக உள்ளனர்.அந்த அணி இங்கிலாந்தை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் கிண்ணத்தை எளிதில் வெல்ல முடியும் என்று நம்புகிறது.

இரு அணிகளும் 2வது முறையாக உலகக்கிண்ணத்தை வெல்ல போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Related posts: