உலகக்கிண்ணம்: சாதனை படைக்க மலிங்கவால் மட்டுமே முடியும்!

Monday, May 20th, 2019

இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

வரும் 30ஆம் திகதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக, ஒவ்வொரு அணியும் வேகமாக தயாராகி வருகின்றன. பல வீரர்கள் இந்த தொடரில் சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.

குறிப்பாக, உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முன்னேற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், இலங்கை அணியின் லசித் மலிங்காவுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத், உலகக்கோப்பையில் 39 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 40 போட்டிகளில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம், 38 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 502 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ், 31 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 6/25 ஆகும். ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 400 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், 23 போட்டிகளில் 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 4/42 ஆகும். 2003 உலகக்கோப்பையில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக அளவில் 4வது அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள மலிங்கா, இதுவரை 22 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த முறை மலிங்கா 10 அல்லது 15 விக்கெட்டுகளை வீழ்த்தலாம். அப்படி அவர் விக்கெட்டுகளை கைப்பற்றினால், இலங்கையின் முன்னாள் வீரர் வாஸ் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தை பிடிப்பார்.

Related posts: