இந்தியா அணி தோல்வி!

Thursday, October 27th, 2016

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகளைக்கொண்ட தொடரில்  இந்தியா- நியூசிலாந்து அணிகள் தலா 2 -2 புள்ளிகளுடன் சமபலத்திலுள்ளன.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய குப்தில், லாதம் (39) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.குப்தில் நிதானமாக விளையாடி 84 பந்தில் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அணித்தலைவர் வில்லியம்சன் (41), ரோஸ் டெய்லர் (35) ஆகியோரும் ஓட்டங்கள் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் பின் வரிசை வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க ஆரம்பித்தனர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 260 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ், குல்கரனி, பாண்ட்யா, அக்சர் படேல் ஆகியோர் ஒரு விக்கெட்டும், மிஸ்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 261 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் ரோஹித் சர்மா (11) ஏமாற்றினார். இதன் பின்னர் ரஹானே, கோஹ்லி ஜோடி சிறப்பாக ஆடியது. கோஹ்லி 45 ஓட்டங்களிலும், ரஹானே (57) அரைசதம் அடித்தும் ஆட்டமிழந்தனர்.

கடந்த போட்டியில் மிரட்டிய டோனி 11 ஓட்டங்களில் வெளியேறினார். மணீஷ் பாண்டே (12), கெடார் ஜாதவ் (0), பாண்ட்யா (9), மிஸ்ரா (14) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர்.

அக்சர் படேல் மறுமுனையில் அதிரடியாக ஆடி 38 ஓட்டங்கள் எடுத்தார். குல்கரனியும் (25) கடைசியில் போராடினார். இருப்பினும் இந்திய அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில், சவுத்தி 3 விக்கெட்டுகளையும், பவுல்ட், நீஸாம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: