இங்கிலாந்துத் தொடர்;  3ஆம் இலக்கத்தில் டிக்வெல்ல!

Wednesday, May 4th, 2016

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், இலங்கை அணி சார்பாக மூன்றாவது இலக்கத்தில் விக்கெட் காப்பாளரான நிரோஷன் டிக்வெல்ல துடுப்பெடுத்தாடுவார் என்றவாறான சமிக்ஞையை, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த முறை இங்கிலாந்துக்குச் சென்ற இலங்கை, டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்திருந்த போதிலும், அனுபவமற்ற அணியாக அங்கு இம்முறை சென்றுள்ள இலங்கை அணி, வெற்றியைப் பெறுவதற்குத் தடுமாற வேண்டியேற்படுமெனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அஞ்சலோ மத்தியூஸ், ‘நிச்சயிக்கப்பட்ட அணியொன்றை விளையாடுவதற்கு நாம் முயலுவோம் என்பதோடு, வீரர்களுக்கு நிரந்தர இடங்களை வழங்குவதை உறுதிப்படுத்துவோம்” என்றார். ‘தற்போதைய நிலையில், திமுத் கருணாரத்னவும் கௌஷால் சில்வாவும் எங்களது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாவர். மூன்றாமிலக்கத்தில், சிறப்பாக உருவாகிவரும் குசால் மென்டிஸ் அல்லது நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவர்” என அவர் தெரிவித்தார்.

இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிக்வெல்ல, கீழ் மத்திய வரிசையிலேயே இதுவரை விளையாடியுள்ளார். ஆகவே, மூன்றாமிலக்கத்தில் அவர் துடுப்பெடுத்தாடுவாரெனில், அது மிகப்பெரிய மாற்றமாக அமையும்.

தான் விளையாடிய இறுதி 7 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு அரைச்சதம் உள்ளடங்கலாக 20.66 என்ற சராசரியிலேயே லஹிரு திரிமான்ன ஓட்டங்களைப் பெற்றுள்ள போதிலும், முழு உடற்றகுதியை அவர் அடைந்தால், அவர் அணியில் சேர்க்கப்படுவார் என்ற கருத்தை, அஞ்சலோ மத்தியூஸ் வெளியிட்டார்.

‘நியூசிலாந்தில் ஏற்பட்ட பின்தொடைத் தசைநார் உபாதையிலிருந்து லஹிரு திரிமான்ன குணமடைந்து வருகிறார். உடற்றகுதியை அவர் அடைவாராயின், முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார். துடுப்பாட்டத்தில் அவரது அனுபவம் எமக்குத் தேவை” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் 19ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ள போதிலும், முதலாவது பயிற்சிப் போட்டி, 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: