ஆஸியுடனான 3வது டெஸ்ட் : மிஸ்பாவின் இறுதிப்போட்டியா?

Monday, January 2nd, 2017

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் விளையாடுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர் அணித்தலைவராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்படுகிறது.

42 வயதான மிஸ்பா, அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் தடுமாறி வருகிறார். அவுஸ்திரேலியாவுக்கெதிரான தற்போதைய தொடரில், 4 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 20 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். இதில், அவர் ஆட்டமிழந்த விதங்களும், அதிக விமர்சனத்தைச் சந்தித்துள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2ஆவது போட்டியில், முதல் இனிங்ஸில் 443 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி, பின்னர் இனிங்ஸால் தோல்வியடைந்திருந்தது. அப்போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மிஸ்பா, சிட்னியில் நாளை(03) ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்துச் சிந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடகங்களுக்கான பணிப்பாளர் அம்ஜட் ஹுஸைன், “சிட்னியில் மிஸ்பா விளையாடுவார். அவர், அணித்தலைவராகவும் இருப்பார்” என அறிவித்தார்.

இதன்மூலம், புதிய அணித்தலைவராகத் தேடுவதற்கான அவசர பணி, இல்லாது போயுள்ளதாகக் கருதப்படுகிறது. சிட்னிக்கு 31ஆம் திகதி சென்ற பாகிஸ்தான் அணி, ஆண்டின் முதல் நாளான  நேற்று(01), பயிற்சிகளில் ஈடுபடவில்லை. எனவே, இன்று(02) மாத்திரமே, அவ்வணி பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை, இந்தத் தொடரை மிஸ்பா முடித்துக் கொடுக்கவுள்ள போதிலும், அதன் பின்னர் அவர் என்ன செய்வார் என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலைமையே காணப்படுகிறது. பாகிஸ்தானின் அடுத்த டெஸ்ட் தொடர், ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கவுள்ளது. அது, கரீபியன் தீவுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இடம்பெறவுள்ளது. அத்தொடர் வரை மிஸ்பா காத்திருப்பாரா என்பது சந்தேகமே.

தற்போதைய எதிர்பார்ப்புகளின்படி, அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பவுள்ள மிஸ்பா, சொந்த நாட்டில் வைத்துத் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

misba

Related posts: