தாய் இறப்பு: அணிக்காக விளையாடிய வீரர்!

Monday, February 4th, 2019

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அல்ஸாரி ஜோஸப் தனது தாய் இறந்த செய்தி கேட்டும், அணிக்காக விளையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. ஆண்டிகுவாவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, போட்டியின் 3வது நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. அப்போது, அந்த அணி வீரர் அல்ஸாரி ஜோசப்பின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என தகவல் அளிக்கப்பட்டது.

அடுத்த சில மணிநேரத்தில் களமிறங்க வேண்டிய நிலையில் இருந்த அல்ஸாரி, தாய் இறந்த செய்தி அறிந்தும் தனது அணிக்காக துடுப்பாட்டம் செய்தார்.

பின்னர் தாயின் இறுதிசடங்குக்காக சென்ற அவர், 24 மணிநேரத்தில் அணிக்கு திரும்பி மீண்டும் விளையாடினார். அல்ஸாரி களத்திற்கு வந்தபோது ரசிகர்கள் கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் 4ஆம் நாள் ஆட்டத்தில் அனைத்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், சக வீரரின் தாய் இறந்த துக்கத்தில் பங்கேற்கும் விதமாக கையில் கறுப்புப்பட்டை அணிந்து விளையாடினர். இந்தப் போட்டியில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை இரு இன்னிங்சிலும் வீழ்த்தினார். இந்த வெற்றிக்குப் பின் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் கூறுகையில்,

‘அல்ஸாரி ஜோசப்பின் உணர்வுகளை விவரிப்பது, விளங்குவது கடினமானது. தாய் இறந்த சூழலிலும் அணியின் வெற்றிக்காக களமிறங்கினார். தனது தாய் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு, மீண்டும் அணியில் இணைந்து பந்துவீசி வெற்றிக்கு உதவினார்.

தாயை இழந்துவாடும் ஜோசப்பிற்கும், அவரின் குடும்பத்தாருக்கும் இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவிக்கிறோம். இந்த வெற்றியை அல்ஸாரி ஜோசப்பிற்கு சமர்ப்பிக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கிந்திய தீவுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பின் தாய் ஷாரன் ஜோசப் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். இந்தக் கடினமான நேரத்தில் அல்ஸாரி ஜோசப்புடன் அனைவரும் இணைந்து நிற்போம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: