ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை: அனில் கும்ப்ளே!

Wednesday, March 15th, 2017

இந்திய அணியினர், போட்டியின்போது தங்களது ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

வீரர்களிடம் இருந்து வெளிப்படும் அவர்களது இயல்பான உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை. அதேபோல், அவர்களிடம் எதிர்பார்ப்பதை தான் அவர்கள் செய்ய வேண்டும்

என்றும் விரும்பவில்லை. வீரர்களின் ஆக்ரோஷம் தொடர்பாக நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். போட்டியின்போது, ஒவ்வொரு வீரர்களும் தங்களது உணர்வுகளை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

உண்மையில் அது தான் நமக்கு வேண்டும். ஏனெனில் ஒரு வீரரிடம் உள்ள திறமை மற்றும் ஆக்ரோஷம் என்னவோ அதை அவர் வெளிப்படுத்தத் தான் நாம் எதிர்பார்க்கிறோம். இந்தியா-ஆஸ்திரேலியா தொடரைப் பொருத்த வரையில் இது முக்கியமான தருணம். இரு அணிகளும் சம நிலையில் இருப்பதால், இரு தரப்புமே கடுமையாக விளையாடும். எனினும், இந்தத் தொடரில் கிரிக்கெட் விளையாட்டுதான் வெல்லும்.போட்டியின்போது, இதர சர்ச்சைகளை தவிர்த்து விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என்று நம்புகிறோம். வீரர்களே விளையாட்டில் முக்கியமானவர்கள். அவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்துள்ளனர்.

டிஆர்எஸ் சர்ச்சையை பொருத்த வரையில், பிசிசிஐ மேற்கொண்ட முதிர்ச்சியான முடிவு பாராட்டத்தக்கது. ஏனெனில், அப்போது தான் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த முடியும். அந்த வகையில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் இணைந்து அறிக்கை வெளியிட்டு, அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது. டிஆர்எஸ் சர்ச்சை போட்டியை பாதிக்கவில்லை. நாங்கள் விளையாட மட்டுமே விரும்புகிறோம். நாங்கள் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை; நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். டிஆர்எஸ் மற்றும் ஆடுகளம் தொடர்பான சர்ச்சைகளில் வீரர்கள் கவனம் சிதறவில்லை. முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணி அருமையாக மீண்டு வந்துள்ளது. பெங்களூரு டெஸ்ட் வெற்றி, அணிக்கான ஒரு பரிசாகும் என்று அனில் கும்ப்ளே கூறினார்.

Related posts: