அஸிக்காக காத்திருக்கும் சுழல்!

Thursday, August 4th, 2016

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, இன்று ஆரம்பிக்கவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, பல்லேகெலையில் இடம்பெற்றபோது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி, அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்திருந்தது. பல்லேகெலை ஆடுகளத்தோடு ஒப்பிடும் போது, காலி ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு அதிகமான உதவியை வழங்கக்கூடியது. ஆகவே, சுழற்பந்து வீச்சுப் பரீட்சையொன்றை, அவுஸ்திரேலியா மீண்டும் எதிர்கொள்ளவுள்ளது.

காலி மைதானத்தில் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, 15 போட்டிகளின் வென்றுள்ளது. இறுதி 14 போட்டிகளில் 9 போட்டிகளின் வென்றுள்ளது. இறுதி 2 போட்டிகளிலும் கூட, இலங்கை அணி வென்றுள்ளது.

இலங்கை அணியில் 2009ஆம் ஆண்டு மீள்வருகையை மேற்கொண்ட பின்னர், 12 போட்டிகளில் பங்குபற்றியுள்ள ரங்கன ஹேரத், 22.77 என்ற சராசரியில் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 விக்கெட் பெறுதிகள் 8 உம், 10 விக்கெட் பெறுதிகள் 3உம் உள்ளடங்குகின்றன. ஆகவே, பல்லேகெல என்பது அவுஸ்திரேலியர்களுக்குக் கடினமானதாக அமைந்திருந்தால், காலி என்பது ஹேரத்தின் கோட்டை. அதை எவ்வாறு எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா?

இப்போட்டியில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பின் உடற்றகுதி தொடர்பாகச் சந்தேகம் எழுந்துள்ளதோடு, அப்போட்டியில் அவர் பங்குபற்றுவாரா என்ற முடிவு, இன்று காலையே எடுக்கப்படவுள்ளது. அவர் விளையாடவில்லையெனில், தனது டெஸ்ட் அறிமுகத்தை விஷ்வா பெர்ணான்டோ மேற்கொள்வார்.

எதிர்பார்க்கப்படும் அணி: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, குசால் பெரேரா, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், லக்ஷான் சந்தகன், விஷ்வா பெர்ணான்டோ. அவுஸ்திரேலியா சார்பாக, காயமடைந்த ஸ்டீவன் ஓஃப் கீ-க்குப் பதிலாக, ஜோன் ஹொலன்ட், தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி: டேவிட் வோணர், ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், மிற்சல் ஸ்டார்க், நேதன் லையன், ஜொஷ் ஹேஸல்வூட், ஜோன் ஹோலன்ட்.

Related posts: