ஜோகோவிச் ஓய்வெடுக்க முடிவு !

Friday, June 9th, 2017

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்னிஸ் விளையாட்டில் இருந்து சற்று ஓய்வெடுப்பது குறித்து ஆராய்ந்த வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பு ஆண்டில் கடும் வீழ்ச்சியை சந்தித்த ஜோகோவிக், நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் களமிறங்கினார். ஆனால் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில் அவுஸ்ரேலிய வீரர் டொமினிக் தீமிடம் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.

இதனால் மனமுடைந்துள்ள நோவக் ஜோகோவிச், சிறிது கால ஓய்வின் பின் மீண்டும் வலுவான நிலைக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையுடன், சற்று ஓய்வெடுப்பது குறித்து தீர்மானம் எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“என்னை நம்புங்கள். நான் பல விடயங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் நடந்த விடயங்களை நினைத்துப் பார்க்கிறேன். அதேசமயம், என்னுடைய விளையாட்டிற்கு நான் பொறுப்பேற்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். பிரெஞ்ச் ஓபன் தொடருக்குப் பிறகு எனது மனநிலையைப் பொருத்து அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்வேன்.

அனைத்து முன்னணி வீரர்களும் கடைப்பிடிக்கும் வழியில் சென்று நானும் உரிய படிப்பினைகளை கற்று வலுவான வீரராக திரும்ப வேண்டும். இது மிகப்பெரிய சவால் என்றாலும் நான் அதை செய்து முடிப்பேன். விளையாட்டில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறேன் என்பதை அறிவேன். எனவே, மீண்டும் அந்த நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறினார்

Related posts: