அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம்!

Saturday, October 8th, 2016

மேற்கிந்திய தீவு தொடரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான்அணித்தலைவர் அசார் அலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறது. ஆனால், ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

அடுத்த வருடம் செப்டம்பர் 30-ம் திகதிக்குள் முதல் 7 இடத்தைப் பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் நாடு ஆகிய 8 அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதிபெறும்.

அந்த வகையில் பாகிஸ்தான் தடுமாறி இருந்த நிலைமையில்தான் பாகிஸ்தான் – மேற்கிந்தியதீவு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாடுகளில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றி மேற்கிந்திய தீவு அணியை வெள்ளையடித்தது. இதன்மூலம் 9-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்த அணி உள்ளது.

அதேசமயம், இதற்குப் பிறகு பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்த வருடம்தான் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு கடும் சவால் கொடுத்து உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறுவோம் என்று அந்த அணியின் தலைவர் அசார் அலி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் தலைவர் மேலும் கூறுகையில் ‘‘மேற்கிந்திதீவு தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிகப்படியான சவாலுக்கு இந்த தொடர் ஒரு தொடக்கம்தான். அடுத்த வருடம் செப்டம்பர் 30-ம் திகதி வரை இதே முன்னேற்றத்துடன் செல்ல வேண்டும். நாங்கள் சிறந்த வீரர்களை பெற்று ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். பாபர் அசம் இந்த தொடரில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசியது, அவர் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளார் என்பதை காட்டுகிறது. அவர் உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் முக்கியமான பகுதியாக செயல்பட்டார். அனைத்து வீரர்கள், தேர்வுக்குழு, களத்தடுப்பு பயிற்சியாளர், பிசியோ மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஆகியோருக்கு இந்த சிறப்பு சேரும்.

அடுத்ததாக நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறோம். இந்த தொடரிலும் எங்களால் எதிரணிக்கு சவால் கொடுக்க முடியும்.ஏனென்றால், எங்கள் அணியின் புதிய வீரர்கள் போட்டியின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக உள்ளனர்’’ என்றார்.

azhar-ali-pic-720x480

Related posts: