அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: இரண்டாம் சுற்றில் செரினா!

Thursday, September 1st, 2016

வருடத்தின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாம் நாள் ஆட்டங்களில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், நான்காம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியஸ்கா றட்வன்ஸ்கா, ஐந்தாம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், ஆறாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வொர்விங்கா, ஏழாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, பத்தாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமிக் தெய்ம் ஆகியோர் முதலாவது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குச் தகுதி பெற்றனர்.

செரினா, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் எகத்ரினா மகரோவாவைத் தோற்கடித்தும், றட்வன்ஸ்கா, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவைத் தோற்கடித்தும், ஹலெப், 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிறிஸ்டின் ஃபிலிப்கென்ஸைத் தோற்கடித்தும், வீனஸ், 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரேய்னின் கதரினா கொஸ்லோவைத் தோற்கடித்தும் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

இதேவேளை, முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா இவானோவிக், 7-6, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் டெனிஸா அலேர்ட்டோவிடம் தோல்வியுற்றதோடு, கனடாவின் இயூஜினி புச்சார்ட், 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கதரினா சினியாகோவாவிடம் தோல்வியுற்றார்.

மரே, 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் லூகாஸ் றொஸோலைத் தோற்கடித்தும், வொர்விங்கா, 7-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ வேர்டாஸோவைத் தோற்கடித்தும், நிஷிகோரி, 6-1, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் பெஞ்சமின் பெக்கரைத் தோற்கடித்தும், தெய்ம், 6-3, 2-6, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மானைத் தோற்கடித்தும் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

இதேவேளை, 14ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபின், 6-4, 7-5, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஜரேட் டொனால்ட்சனிடம் தோல்வியுற்றிருந்த நிலையில், 16ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் நிக் கிரியோஜிஸ், 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரித்தானியாவின் அல்ஜஸ் பெடெனைத் தோற்கடித்தார்.

Related posts: