அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார் வாவ்ரிங்கா !

Tuesday, September 6th, 2016

அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சாதனையில் புதிய மைல்கல்லை எட்டினார்.

 ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 6–வது நாளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் அனல் பறந்தது. இதன் 3–வது சுற்றில் 3–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 64–ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்சை எதிர்கொண்டார். இதில் வாவ்ரிங்காவுக்கு கடும் சவால் கொடுத்த டேனியல் இவான்ஸ் வெற்றியின் விளிம்புக்கு நெருங்கி வந்தார். 4–வது செட்டில் டேனியல் இவான்ஸ் 6–5 என்று முன்னிலை பெற்று, ஆட்டத்தை வெல்வதற்குரிய ‘மேட்ச் பாயிண்ட்’ வாய்ப்பையும் பெற்றார். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. அந்த ஆபத்தில் இருந்து ஒரு வழியாக தற்காத்துக் கொண்ட வாவ்ரிங்கா இந்த செட்டை டைபிரேக்கருக்கு கொண்டு சென்று வசப்படுத்திய பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டார். அதன் பிறகு கடைசி செட்டில் டேனியலிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

4 மணி நேரம் நீடித்த இந்த யுத்தத்தில் வாவ்ரிங்கா 4–6, 6–3, 6–7 (6–8), 7–6 (10–8), 6–2 என்ற செட் கணக்கில் இவான்சை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

பின்னர் வாவ்ரிங்கா கூறுகையில், ‘இது ஒரு நம்ப முடியாத போராட்டம். எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ நிலையில் இருந்து தப்பித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டமாகும். இவான்ஸ் திறமையான வீரர். அபாரமாக விளையாடி நெருக்கடி கொடுத்தார்’ என்றார்.

ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7–6 (4), 5–7, 6–2, 6–3 என்ற செட் கணக்கில் பாவ்லோ லோரென்சியை (இத்தாலி) தோற்கடித்து 4–வது சுற்றை எட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் 10–ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), 1–6, 6–4, 6–4, 7–5 என்ற செட் கணக்கில் காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) வெளியேற்றினார். தனது 23–வது பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த வெற்றி கிட்டியது. வெற்றி பெற்றதும், அவரது பயிற்சியாளர், உதவியாளர்கள் ஓடி வந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஜூவான் மார்ட்டின் டெல் பெட்ரோ (அர்ஜென்டினா), நிஷிகோரி (ஜப்பான்), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), இவா கார்லோவிச் (குரோஷியா), மார்சென்கோ (உக்ரைன்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா லார்சனை (சுவீடன்) விரட்டினார். கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் செரீனாவின் 307–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968–ம்ஆண்டில் இருந்து) வரலாற்றில் கிராண்ட்ஸ்லாமில் அதிக வெற்றிகளை பெற்ற வீராங்கனையான சக நாட்டு ஜாம்பவான் மார்ட்டினா நவரத்திலோவாவின் (306 வெற்றி) சாதனையை முறியடித்தார். அத்துடன் இந்த வகையில் ஆண்களில் அதிக வெற்றி பெற்றவரான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் (307 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.

செரீனா அடுத்து கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவாவுடன் மோதுகிறார். செரீனாவின் சகோதரியான முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் 3–வது தடையை எளிதாக கடந்தார். வீனஸ் 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் லாரா சிட்ஜ்மன்ட்டை (இங்கிலாந்து) வென்றார்.

தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் தன்னை எதிர்த்த கரோலினே கார்சியாவை (பிரான்ஸ்) காலி செய்து 4–வது முறையாக 4–வது சுற்றுக்குள் நுழைந்தார். சிமோனா ஹாலெப் (ருமேனியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்), அனா கொஞ்ஜூ (குரோஷியா), பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோரும் 4–வது சுற்றை உறுதி செய்தனர்.

பெண்கள் இரட்டையரில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை இந்தியாவின் சானியா மிர்சாவின் அசத்தல் தொடருகிறது. சானியா, செக்குடியரசின் பார்பரோ ஸ்டிரிகோவாவுடன் இணைந்து 2–வது சுற்றில் விக்டோரிஜா (சுவிட்சர்லாந்து)– நிகோல் மெலிசார் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொண்டார். இதில் சானியா– ஸ்டிரிகோவா கூட்டணி 6–2, 7–6 (5) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு முன்னேறியது.

இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவின் மற்றொரு 2–வது சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)– கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி 5–7, 6–3 (10–7) என்ற செட் கணக்கில் ஆன்ட்ரியா ஹவக்கோவா (செக்குடியரசு)– லுகாஸ் குபோத் (போலந்து) இணையை வென்றது.

நடப்பு சாம்பியன் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ்– சுவிட்சர்லாந்து மங்கை மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 2–வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இவர்கள் 6–7 (1), 6–3 (11–13) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் – கோகோ வன்டேவெஜ் இணையிடம் போராடி வீழ்ந்தனர். வன்டெவெஜ், பெண்கள் இரட்டையர் பிரிவில் ஹிங்கிசின் ஜோடி ஆவார். பெயஸ் ஏற்கனவே ஆண்கள் இரட்டையரிலும் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம்.

house-620x330 copy

Related posts: