அன்று உலகக்கிண்ண “ஹீரோ”.. இன்று பொலிஸ் அதிகாரி

Saturday, March 12th, 2016

கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா உலகக்கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜொகிந்தர் சர்மா.

ஆனால் இன்று அவர் ஹரியானா காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக (Deputy Superintendent of Police) பணியாற்றுகிறார்.

அந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இவரது பங்களிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

கடந்த 2007ல் நடந்த டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 158 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை நெருங்கியது. ஆனால் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தது.

இதனால் 19வது ஓவரின் போது பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மிஸ்பா உல் ஹக், முகமது ஆசிப் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை வெற்றி என்ற நிலையில், அணித்தலைவர் டோனி ஜொகிந்தர் சர்மாவை பந்துவீச அழைத்தார்.

அவர் முதல் பந்தை வெயிடாக வீச, அடுத்த பந்தில் ஓட்டங்கள் ஏதுமில்லை. ஆனால் 2வது பந்தை மிஸ்பா சிக்சராக மாற்றினார்

இதனால் இந்திய அணி நம்பிக்கை இழந்தது. ஆனால் 3வது பந்தில் அவரை ஆட்டமிழக்க செய்து அசத்தினார் ஜொகிந்தர்.

இதனால் இந்திய அணி 5 ஓட்டங்களால் ’திரில்’ வெற்றி பெற்று அறிமுக தொடரிலே கிண்ணம் வென்றது.

இந்நிலையில் இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல உதவிய ஜொகிந்தர் சர்மாவை பாராட்டி ஹரியானா அரசு அவருக்கு ரூ.24 லட்சம் பரிசளித்தது.

மேலும், அதற்கு அடுத்த மாதமே ஹரியானா காவல் துறையில் துணை கண்காணிப்பாளர் பணியையும் வழங்கி கெளரவித்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி அணிந்து உலகக்கிண்ண தொடரில் அசத்திய ஜொகிந்தர், தற்போது கம்பீரமாக காக்கி சட்டை அணிந்து நாட்டிற்காக சேவை புரிந்து வருகிறார்.

Related posts: