அமெரிக்காவில் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்!
Saturday, August 27th, 2016
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று நடைபெறுகின்றது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் சர்வதேச தொடர், பொதுவான இடமான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்கு இந்த போட்டிக்கு (ஆக. 27, ஆக.28) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில், சர்வதேச கிரிக்கெட்டுக்கு உகந்த மைதானம் என்று ஐ.சி.சி. அங்கீகரித்துள்ள ஒரே மைதானம் இது தான்.
இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) லாடெர்ஹில்லில் நடைபெறுகிறது. இந்திய அணி டோனி தலைமையில் களம் இறங்குகிறது. சமீப காலமாக பார்மில் இல்லாத டோனி நன்கு ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைக்கிறார். மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முயற்சிப்பார். விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரைத் தான் இந்திய அணி நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் ஓரளவு வலுவாக தென்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் அனில்கும்பிளே கூறுகையில், ‘நானும், டோனியும் நீண்ட காலம் இணைந்து விளையாடி இருக்கிறோம். ஆனால் கேப்டன், பயிற்சியாளர் என்று கூட்டணி அமைப்பது இதுவே முதல் முறையாகும். அவருடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறேன். இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் மிகவும் திருப்தி அளிக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட இருப்பது, ஒரு அற்புதமான தொடக்கம். நிறைய இந்திய ரசிகர்கள் வந்து உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக ஆல்–ரவுண்டர் கார்லஸ் பிராத்வெய்ட் தலைமையில் களம் இறங்குகிறது. அந்த அணிக்கு இரண்டு 20 ஓவர் உலக கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன் டேரன் சேமி அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளார். 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் விளாசியவர் தான் இந்த கார்லஸ் பிராத்வெய்ட். கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், பொல்லார்ட் என்று அதிரடி சூரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்திய அணிக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்றே சொல்லாம்.
வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘20 ஓவர் தொடருக்கு நாங்கள் நன்றாக தயாராகி உள்ளோம். 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி இருந்தோம். அதற்கு பழிவாங்க முயற்சிப்பார்கள். அவர்கள் எத்தகைய சவால் அளித்தாலும் அதை சமாளிக்க தயாராக உள்ளோம். மூத்த வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
ஐ.சி.சி. 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் நியூசிலாந்து 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 128 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 122 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளன.
தொடரை இந்தியா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றினால், நமது அணியின் புள்ளி எண்ணிக்கை 132 ஆக உயரும். ஆனாலும் மயிரிழையில் நியூசிலாந்தை விட பின்தங்கி 2–வது இடத்திலேயே நீடிக்கும். அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2–0 என்ற கணக்கில் தொடரை வென்றால் 127 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு முன்னேறும். இந்தியா 124 புள்ளிகளுடன் 3–வது இடத்துக்கு சரியும். தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தால், இந்தியா 128 புள்ளிகளுடனும், வெஸ்ட் இண்டீஸ் 123 புள்ளிகளுடனும் அதே வரிசையில் நீடிக்கும். துடப்பாட்ட தரவரிசையில் 837 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி தனது இடத்தை வலுப்படுத்தி கொள்ள இந்த ஆட்டத்தில் அசத்த வேண்டியது முக்கியமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 2–ல் ஆட்டத்திலும், 3–ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. அதே சமயம் லாடெர்ஹில் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. 2010–ம் ஆண்டு இலங்கை–நியூசிலாந்து இடையே இரண்டு 20 ஓவர் போட்டிகளும், 2012–ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்–நியூசிலாந்து இடையே இரண்டு 20 ஓவர் போட்டிகளும் நடந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் ரன்மழை பொழிந்து வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.
Related posts:
|
|
|


