அடுத்த ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 5இல் ஆரம்பம்!

Thursday, November 10th, 2016

அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர், ஏப்ரல் 5ஆம் திகதி ஆரம்பித்து, மே 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. எனினும் இந்தத் திகதிகள், லோதா செயற்குழுவின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்தத் திகதி உறுதிப்படுத்தப்பட்டால், இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒரு வாரத்துக்குள், ஐ.பி.எல் ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடர், மார்ச் 29ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

அதேபோல், சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், ஜூன் 1ஆம் திகதி, இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ளது. ஆகவே, ஐ.பி.எல் இறுதிப் போட்டி நிறைவடைந்து 10 நாட்களில், அந்தத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. லோதா செயற்குழுவால், இந்த இடைவெளியை 15 நாட்களாகப் பேணுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இவ்வறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

வீரர்களுக்கான ஏலம் விடும் நிகழ்வு, பெப்ரவரி 4ஆம் திகதி, பெங்களூருவில் இடம்பெறவுள்ளது. இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் வழக்கத்தின் படி, தொடரின் முதற்போட்டியும் இறுதிப் போட்டியும், அதற்கு முன்னைய ஆண்டின் சம்பியன்களுக்குரிய இடத்திலேயே இடம்பெறும். இதன்படி, கடந்தாண்டு சம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் சண்றைசர்ஸ் அணிக்கு, அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

article_1478698263-TamilP12---IPL_09112016_GPI

Related posts: