51 ஆண்டுகளுக்கு முன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு!

Wednesday, July 24th, 2019

பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலொன்று 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேடுதல் குழுவினர் மற்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான மினர்வ் என்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி 52 மாலுமிகளுடன் பயணித்துள்ளது.

குறித்த கப்பல் அந்நாட்டின் தெற்கு கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.

இதனையடுத்து, காணாமல் போன கப்பலையும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலையையும் கண்டறிய பல கட்டங்களாக தேடுதல் பணி நடைபெற்றுள்ளது.

இருப்பினும் குறித்த நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் தேடுதல் பணி கைவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி டிரோன்கள் உதவியுடன் மீண்டும் கப்பலை தேடும் பணி கடந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் டூலோன் பகுதியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடலில் 2370 அடி ஆழத்தில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் அரை நூற்றாண்டுக்கு முன்னர் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமையானது காணாமல் போன 52 மாலுமிகளின் உறவினர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

Related posts: