720 நாள்களுக்கும் அதிகமாக சுற்றும் அமெரிக்க ரகசிய விமானம்!

Saturday, August 31st, 2019


விண்வெளியில் ஒவ்வொரு நாடும் தொடர்ந்து அதன் பலத்தை அதிகரித்துக்கொண்டே வரும்  நிலையில் அதற்காக அவை வெளிப்படையாகச் சில பரிசோதனைகளை நடத்தவும் செய்கின்ற அதேவேளை ஒரு சில சோதனைகள் ரகசியமானவையாக பேணப்படுகின்றன.

அந்தவகையில் அப்படி ஒரு ரகசியத் திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்பட்டதுதான் அமெரிக்க விமானப் படையின் X-37B என்று பெயரிடப்பட்டிருக்கும் விண்வெளி விமானம். இது கடந்த 2017-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் தற்போது பூமியைச் சுற்றி வரும் இது இன்னும் சில நாள்களில் முழுமையாக இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது.

இந்நிலையில் பூமியின் தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த விமானத்தை எதற்காக அமெரிக்கா பயன்படுத்தப்போகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

தொடக்கம் முதலே மர்மமாக இருந்து வரும் திட்டம் இது. சுற்றுப்பாதை சோதனை வாகனம் (Orbital Test Vehicle) என்ற இந்தத் திட்டத்தை 1999-ம் ஆண்டில் தொடங்கியது நாசா. அதன்பின்னர், சில காலம் கழித்து இந்தத் திட்டம் அமெரிக்க விமானப்படையின் வசம் சென்றது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2010-ம் ஆண்டில் முதல் விண்வெளி விமானம் விண்ணில் ஏவப்பட்டு 224-நாள்கள் பூமியைச் சுற்றி வந்த பின்னர் அது பூமிக்குத் திரும்பியது.

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் விண்ணுக்குச் சென்ற இந்த விமானம் 718 நாள்கள் கழித்து 2017-ம் ஆண்டு மே மாதம் பூமிக்குத் திரும்பியது. அதன் பின்னர் அதே வருடத்தில் செப்டம்பர் மாதம் ஐந்தாவது முறையாக மீண்டும் விண்ணில் ஏவப்பட்ட X-37B தற்போது அதன் முந்தைய சாதனையான 718 நாள்கள் என்பதை தாண்டியிருக்கிற நிலையில் அது இன்னமும் தரையிறங்கவில்லை

2010-ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் விண்ணில் ஏவப்படும் X-37B இதுவரை நான்கு பயணங்களை முழுமையாக நிறைவு செய்திருக்கிறது.

தற்போது விண்வெளியில் இருக்கும் விமானம் எப்போது பூமிக்குத் திரும்பும் என்பது தெரியவில்லை. மேலும் குறிப்பிடத்தக்க விஷயமாக ஒவ்வொரு முறையும் அது விண்ணில் இருக்கும் காலம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த விமானம் பற்றிய புகைப்படங்கள், தரையிறங்கும் வீடியோ எனப் பல விஷயங்களை வெளியிடும் அமெரிக்க விமானப் படை உண்மையில் இது எதற்காகப் பயன்படப்போகிறது என்ற தகவல்களை மட்டும் இதுவரை வெளியிடவில்லை.

ஒரு பேருந்தின் அளவு இருக்கும் X-37B விண்வெளி விமானம் தரையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கேற்ப அது இயங்கும். மேலும், இதன் வெளிப்புறத்தில் இருக்கும் சோலார் பேனல்கள் மூலமாகத் தேவையான ஆற்றலைப் அது பெற்றுக்கொள்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் இந்த விமானத்தால் அதிக நாள்களை விண்ணில் கடத்த முடிகின்றது.

உலக நாடுகளை உளவு பார்ப்பதற்காகவா இந்த ரகசிய விமானம்?

ஒரு செயற்கைக்கோளுக்குப் பயன்பாட்டுக் காலம் என்று ஒன்று உண்டு. குறிப்பிட்ட வருடங்களைக் கடந்த பின்னால் அவற்றை அப்கிரேட் செய்ய முடியாது. செயலிழந்த செயற்கைக்கோள் ஒன்று பூமியில் விழும் அல்லது விண்வெளிக் குப்பையாக மாறி பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கான மாற்றாகத்தான் X-37B விண்வெளி விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தப்போகிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது.

ஒரு செயற்கைக்கோள் எந்த தேவைக்காக அனுப்பப்படுகிறதோ அதற்காகக் கருவிகளை இந்த விமானத்தில் வைத்து விண்ணில் ஏவலாம். சில காலம் கழித்து கருவிகளில் பிரச்னை ஏற்பட்டாலோ, அப்கிரேட் செய்ய வேண்டும் என்றாலோ மீண்டும் பூமிக்குத் திரும்பி வரச் செய்யலாம். ஆனால், அது உண்மையாக இருந்தால் இந்தத் திட்டம் நாசாவின் கட்டுப்பாட்டில்தானே இருக்க வேண்டும் எதற்காக அமெரிக்க விமானப்படை இந்தத் திட்டத்தைக் கையில் வைத்திருக்கிறது?

போயிங் நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்த விமானம் பார்ப்பதற்கு நாசாவின் ஸ்பேஸ் ஷட்டில் போலவே இருக்கிறது. இதன் மூலமாக ‘ஸ்பெஷல் சென்ஸார்’களையும், வேறு சில கருவிகளையும் ஆராய்ச்சிக்காக விண்வெளிக்குக் கொண்டுசென்று மீண்டும் திருப்பி வரவைக்கப்படும் என்கிறது அமெரிக்க விமானப்படை.

எனினும் கருவிகள் தொடர்பான தகவல்களையும், இதன் உண்மையான நோக்கத்தைப் பற்றியும் பேச மறுக்கிறது. அதுதான் பிற நாடுகளை உளவு பார்க்க இந்த விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியான பிரைன் வீடன் கூறுகையில், இந்த விமானம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு உளவாளியாக இருக்கலாம். அல்லது உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு போன்ற துறைகளில் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் தளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி வட கொரியா, இரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு மேலே X37B-ன் சுற்றுப்பாதை இருந்தது வெறும் தற்செயலாக அமைந்தது என்பதை நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நாடுகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு ஏதோ ஒரு வகையில் தொல்லை தரும் நாடுகளாகவே இருக்கின்றன. எனவே, பிரைன் வீடன் குறிப்பிட்டது போல ஆராய்ச்சி என்ற பெயரில் உலக நாடுகளைக் கண்காணிக்க இந்த விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: