விண் முட்டும் கோபுரங்களில் விவசாயப் பண்ணைகள்

Wednesday, April 6th, 2016
உலக மக்கள் தொகை தற்போது எழுநூறு கோடி. 2050ஆம் ஆண்டு இது ஆயிரம் கோடியாக உயரும்போது அவர்களுக்கான உணவைத்தரும் அளவுக்கு நிலம் இருக்கிறதா என்கிற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஸ்கைபார்ம்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விண்ணில் உருவாகும் விவசாயப்பண்ணைகள் இதற்கான ஒரு பகுதித் தீர்வாக அமையலாம் என்று விவசாய பெரு வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன.

அமெரிக்காவின் நியூஜெர்ஸியிலுள்ள நேவார்க் நகர மையத்தில் இருக்கும் ஒரு சரக்ககத்திற்குள் பல ஏக்கர் பரப்பில் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. அத்தனையும் பசுமையான கீரைகள்.

தரையில் இருந்து கூரைவரை பல அடுக்குகளில் இவை பயிரிடப்பட்டுள்ளன. இவை மண்ணிலும் வளரவில்லை சூரிய ஒளியைக் காணவும் இல்லை. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டலெட் விளக்குகளின் ஒளியில் காற்றாடிகளால் விசிறப்படும் நீர்த்திவளைகளை உண்டு இவை வளர்கின்றன.

ஏரோபோனிக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விவசாய முறை மண்ணில் பயிரிடுவதைவிட பல மடங்கு அதிக மகசூல் தருகிறது என்கிறார் ஏரோ பார்ம்ஸ் நிறுவன பங்குதாரர் மார்க் ஓஷிமா.

“மண்வயலில் 30 முதல் 45 நாட்களில் விளையும் விளைச்சலை இங்கே 12 முதல் 16 நாட்களில் விளைவிக்கலாம். வயலில் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று போக அறுவடைக்கு பதிலாக இங்கே 30 போகம் விளைவிக்கலாம். இது மிகப்பெரிய மாற்றம்” என்கிறார் மார்க் ஓஷிமா.

அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

லண்டன் கட்டிட வடிவமைப்பாளர்களான ரோஜெர்ஸ் ஸ்டிர்க் அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், ஸ்கைபார்ம்ஸ் என்கிற வானில் உயரும் விவசாயம் என்கிற ஒரு மாதிரியை முன்வைக்கிறார்கள்.

மூங்கில் மற்றும் ஒளியை மறைக்காத வலுவான பிளாஸ்டிக்கால் கட்டப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அடுக்குமாடி கோபுரங்களில் இந்த விவசாயம் செய்யப்படும். 80 மீட்டர் உயரம் வரை எழுப்பப்படும் இத்தகைய பிரத்யேக கோபுரங்களில் பல அடுக்குகளில் இயற்கையான சூரிய ஒளியையும் நீர்த்திவளை காற்றாடிகளையும் பயன்படுத்தி விவசாயம் செய்யலாம். நகரின் மையத்திலேயே கூட இவற்றை கட்டமுடியும் என்கிறார் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்கைபார்ம் வடிவமைப்பாளர் இவன் ஹார்பர்.

“பயன்பாட்டாளருக்கு பயிர்களை அருகில் கொண்டுவரும் இந்த மாதிரி விவசாய முறை உலகின் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும்” என்கிறார் அவர்.

எதிர்கால நிலப்பற்றாக்குறைக்கு இந்த வான்நோக்கி வளரும் விவசாயம் முழுமையான தீர்வல்ல என்பதை இதனை உருவாக்குபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதிகபட்ச லாபம் தரக்கூடிய கீரைகள் மற்றும் பச்சைக்காய்கறிகளை பயிரிடுவதன் மூலம் மட்டுமே இத்தகைய பண்ணைகள் வர்த்தக ரீதியில் வெற்றிபெற முடியும்.

ஆனால் உலகின் மூன்றில் இரண்டுபங்கு மக்களுக்கு அரிசியே பிரதான உணவு. அந்த அரிசியை இதுபோன்ற நகர கட்டிடங்களில் பயிரிட முடியாது. அதற்குத் தேவையான லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை எங்கே தேடுவது என்பது தான் விடை காண முடியா கேள்வி

(நன்றி இணையம்)

Related posts: