மனிதர்கள் வாழ்வதற்கு எற்ற மூன்று கிரகங்கள் கண்டுபிடிப்பு

Wednesday, May 4th, 2016

பூமியைப் போலவே மனிதர்கள் வாழத் தகுந்த மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெல்ஜியத்தில் உள்ள லீகே பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது.இது குறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் விண்வெளித்துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறியதாவது:

உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள வேதியியல் படிவங்கள் உள்ள ஒரு சிறு சூரிய குடும்பம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுபோன்ற வேதியியல் படிவங்கள் இருப்பது முதல் முறையாகத் தெரிய வந்துள்ளது. 39 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு சிறு நட்சத்திரத்தை 3 கிரகங்கள் சுற்றி வருகின்றன.
ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவான 6 இலட்சம் கோடி கி.மீ. ஆகும். 39 ஒளியாண்டுத் தொலைவில் இந்த கிரகங்கள் அமைந்துள்ளன. அந்த 3 கிரகங்களிலும் நமது பூமி, சுக்கிரன் (வீனஸ்) கிரகத்தைப் போன்ற அளவு, தட்ப வெப்பம் இருப்பதாகத் தெரிகிறது. இது மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்றவை எனக் கூற முடியும்.

சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டிராப்பிஸ்ட்’ தொலைநோக்கி வழியாக அந்த சிறு நட்சத்திரத்தையும் அதனைச் சுற்றி வரும் 3 கிரகங்களின் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பல மாதங்கள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவை மனிதர்கள் வாழத் தகுந்த கிரகங்கள் என முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் “தி நேச்சர்’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது

Related posts: