பிரேஸிலில் பேஸ்புக் அதிகாரி கைதானார்

Sunday, March 6th, 2016

போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றில் நீதிமன்ற உத்தரவுகளுக்கிணங்க இயங்காமையையடுத்து பேஸ்புக்கின் அதிகாரி ஒருவர் பிரேஸிலில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி லத்தீன் அமெரிக்காவுக்கான பேஸ்புக்கின் உப தலைவரான டியகோ டிஸைடனே, விசாரணைகளுக்காக ஸா போலோவில் கடந்த செவ்வாய்க்கிழமை (01) தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிரேஸிலில் உள்ள மாநிலங்களில் ஒன்றான சேர்ஜிபேயில் உள்ள நீதிமன்ற அதிகாரிகளே இவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக், இது, தீவிரமான மற்றும் பொருத்தமில்லாத நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளது.

பிரேஸிலிய அதிகாரிகளிடத்தே காணப்படும் எந்த வினாக்களுக்கும் பதிலளிக்க பேஸ்புக் எப்போதும் பதிலளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பேஸ்புக், மேற்படிக் கைதானது, பேஸ்புக்கிலிருந்து வேறு இயக்குதளத்தில் இயங்கும் பேஸ்புக்கினுடைய தகவல் பரிமாற்ற சேவையான WhatsApp தொடர்பாகவே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரேஸிலின் சிறிய மாநிலமான சேர்ஜிபேயில் உள்ள லகார்ட்டோ மாவட்டத்திலுள்ள குற்றவியல் நீதிபதி ஒருவரினால் விடுக்கப்பட்ட பிடியாணையிலேயே டியகோ டிஸைடனை கைது செய்துள்ளதாக ஸா போலோவில் உள்ள மத்திய பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அந்தரங்கமாக இடம்பெற்ற விசாரணைக்கு உதவக்கூடிய ஆதாரங்களை வழங்குமாறே கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: