டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் வால்ட் டிஸ்னி?

Wednesday, September 28th, 2016

டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த ட்விட்டர் நிறுவனம் விற்பனை செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் அண்மையில் வெளியாகியது.இதையடுத்து, அந்நிறுவனத்தை வாங்க வால்ட் டிஸ்னி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த வாரம் ட்விட்டர் பங்குகளின் விலை கணிசமான ஏற்றத்தைக் கண்டது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வால்ட் டிஸ்னி கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் 2 இலட்சம் கோடிக்கு கைமாற உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஃபேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பிடும்போது ட்விட்டர் நிறுவன பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருவது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட தனது கடைசி காலாண்டு அறிக்கையில், பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து 31.3 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 170 கோடியாக உள்ளது. அந்நிறுவனத்திற்கு சொந்தமான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், ட்விட்டர் நிறுவனத்திற்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமான அளவுக்கு இல்லை என்று கருதப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை அந்த நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்விட்டரின் இணை நிறுவனரான ஜாக் டார்ஸி, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

disney_twitter

Related posts: