சொக்லேட் உடலுக்கு நன்மையானது – ஆய்வில் தகவல்

Monday, March 28th, 2016

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி சொக்லேட் உண்பது நல்லது எனத் தெரியவந்துள்ளது.

சொக்லேட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை நோய் உட்பட பல உபாதைகள் வந்துச்சேரும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளோ, இதற்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன் மக்களே அதிகமான சொக்லேட்டை சாப்பிடுபவர்கள் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. பிரிட்டனில் இருக்கும் ஆறு பேரில் ஒருவர், சொக்லேட் சாப்பிடுவது வழமை என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இதை ஒரு இலகுவான உணவாகவும் அனைவரும் பார்க்கின்றனர்.

கடும் கொக்கோ சேர்கப்பட்ட சொக்லேட்டை சாப்பிடுவதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது இதயம் சீராக இயங்க சிறந்தது எனவும் அவர்கள் கூறுகின்றனர். தான் அதிகமாக சொக்லேட் சாப்பிடுவதே, தனது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக, இயற்பியலுக்காக 2001ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற எரிக் கோர்னல் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் கூறியுள்ளார்.

மில்க் சொக்லேட் என்றழைக்கப்படும், முழு ஆடைப்பால் கொண்ட சொக்லேட் அவசியமற்றது எனக்கூறும் அவர், கடும் கொக்கோ சேர்கப்பட்ட சொக்லேட் உடலுக்கு சிறந்தது என்பதை தான் நம்புவதாக கூறுகிறார். சொக்லேட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கொக்கோவில், அன்டியோக்ஸிடன்ஸ் எனும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமையினால், அது உடல் சுகாதாரத்திற்கும், மூளைக்கும் சிறந்தது எனக் கூறப்படுகிறது.

ஆனால் அதனை அளவுக்கு அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடலில் சக்கரை மற்றும் கலோரி அதிகரித்து உடலுக்கு கேடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்தில் ஒருமுறையேனும் சொக்லேட் சாப்பிடுவதனால், ஞாபக சக்தி மற்றும் கற்றல் ஆற்றல் மேம்படுவதாக சமீபத்தில் சுமார் 1,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சொக்லேட்டில் காணப்படும் ஒருவகையான இராயசாயனம், 50 தொடக்கம் 59 வரையிலான வயதில் வரும் இயற்கையான ஞாபக மறதியை குறைக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகளவில் சொக்லேட்டை சாப்பிடுவது சிலவேளை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், சொக்லேட் சாப்பிடுவது புற்றுநோய் மற்றும் மன அழுத்த அபாயங்களை குறைக்கும் வல்லமை கொண்டது எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

நீங்கள் சுகாதாரமான உடல் எடையைக் கொண்டவராக இருந்தால், சொக்லேட்டை அச்சமின்றி சாப்பிடலாம் என சுயேட்சையான நிபுணரான டொக்டர் டிம் சிக்கோ கூறுகிறார். அது இதயத்துடன் தொடர்புடைய நோயை கட்டுப்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், அதிக உடல் எடையைக்கொண்டவர்கள் அதிகளவில் சொக்லேட் சாப்பிடுவது பாதமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொக்டர் டிம் எச்சரித்துள்ளார்.

Related posts: