செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக ஆய்வு செய்த ரோவர் விண்கலம் செயலிழந்தது!

Monday, February 18th, 2019

செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகள் ஆய்வு செய்த ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய, கடந்த 2003ஆம் ஆண்டு ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவர் விண்கலத்தை நாசா ராக்கெட் மூலம் அனுப்பியது.

2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர், 3 வாரங்கள் கழித்து தனது பணியை தொடங்கியது. இதன் ஆயுட்காலம் 90 நாட்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 15 ஆண்டுகளாக இந்த விண்கலம் சிறப்பாக செயல்பட்டு, அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

இந்த ரோவர் விண்கலம், லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் கடந்த ஜூன் மாதம் மிகவும் மோசமான புயல் வீசியது. அதில் சிக்கிய ஆபர்ச்சுனிட்டி ரோவர் சற்று செயல் இழந்ததாக தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 15ஆம் திகதி இரவு செவ்வாய் கிரகத்தில் வீசிய பெரிய புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் காணாமல் போன ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், சூரிய ஒளி கிடைக்காததால் சார்ஜ் இல்லாமல் ரோவரின் 6 சக்கரங்களும் செயல் இழந்தன. அதன் பிறகு நாசா ஒருமுறைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. எனினும், ரோவரின் ஒரே ஒரு பாகம் மட்டும் இடையில் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்புகொள்ள விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர். ஆனாலும் அந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக, ரோவர் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து, நேற்று ரோவரை முற்றிலுமாக தொடர்புகொள்ள முடியாததால், அந்த விண்கலம் முற்றிலும் செயலிழந்துவிட்டதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ‘ஆபர்ச்சுனிட்டி ரோவர் பல சாதனைகள் படைத்து இருப்பதால் இந்நேரத்தை கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: