உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம்!

Saturday, April 2nd, 2016
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் கைவிட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த குறித்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லாவோன் (Anja Ringgren Loven) என்ற பெண்மணிக்கு சமூக சேவை செய்வதில் ஆர்வம் இருந்ததால், தனது கணவருடன் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 31-ம் திகதி ஆதரவற்ற நிலையில், உடல் மெலிந்து இறக்கும் நிலையில் இருந்த ஒரு ஆண் குழந்தையை கண்டு கண் கலங்கியுள்ளார். குழந்தையை பற்றி விசாரிக்கையில், ‘குழந்தை ஒரு சூனியக்காரன் என பெற்றோர் நினைத்ததால், அதனை தவிக்க விட்டு விட்டு அவர்கள் வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர்’ என்ற தகவல் கிடைத்தது.
உடனே குழந்தையை அள்ளி அணைத்த அந்த சமூக சேவகி, அதற்கு தண்ணீர் மற்றும் உணவுகளை அளித்துள்ளார். பின்னர், அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தூக்கி சென்று குழந்தையின் உடலில் உள்ள அசுத்தங்கள் மற்றும் வயிற்றில் இருந்த புழுக்களை நீக்கி அன்பாக பராமரித்துள்ளார். மேலும், குழந்தைக்கு புதிய ரத்தம் செலுத்தியது உள்ளிட்ட அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்துள்ளார்.குழந்தையின் மெலிந்து போன உடலுடன் புகைப்படம் வெளியிட்டு அதற்கான மருத்துவ செலவுகளுக்கு நிதியுதவி கேட்டுள்ளார்.
குழந்தையின் நிலையை பார்த்து உலகம் முழுவதுமிருந்து ஒரு மில்லியன் டாலர் நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி குழந்தையை நன்றாக பராமரித்து வந்ததன் விளைவாக, தற்போது 8 வாரங்களுக்கு பிறகு அந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது.
அந்த குழந்தையின் புதிய படங்களை தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அந்த சமூக சேவகி.
“ஆதரவற்ற குழந்தைகளை அன்பாக பராமரித்தால், அவர்களின் எந்த சூழலையும் வெற்றி பெறலாம் என்பதை இந்த குழந்தை நிரூபித்துள்ளது. மற்றவர்களுக்கும் இந்த குழந்தை நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த குழந்தைக்கு ’Hope’ (நம்பிக்கை) என பெயர் சூட்டியுள்ளேன்.
இந்த குழந்தைக்கு தற்போது சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை உள்ளது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிறகு அதுவும் குணமாகிவிடும். தற்போது இந்த குழந்தை ஆசிரமத்தில் உள்ள 35 குழந்தைகளுடன் ஆரோக்கியமாக விளையாடி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Related posts: