ஆடுகளை கொன்ற நாயை நீதிமன்றத்தில் நிறுத்திய விவசாயி!

Friday, July 8th, 2016
 
ஜேர்மனியில்12 ஆடுகளை நாய்குட்டி ஒன்று கொன்றதாக புகார் கூறியுள்ள விவசாயி ஒருவர் அதனை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Dusseldorf என்ற நகர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு லேடி எனப்பெயரிடப்பட்ட நாய்குட்டி ஒன்றை அதன் உரிமையாளரின் பேரப்பிள்ளை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிய பாதையில் நடந்துச் சென்றபோது, நாயின் உடலில் எந்த கயிறும் கட்டப்படாமல் குதித்து சென்றுள்ளது. அப்போது, எதிரே ஒரு விவசாயி எண்ணற்ற ஆடுகளை ஓட்டி வந்துள்ளார். ஆட்டுக்கூட்டத்தை கண்டு உற்சாகம் அடைந்த அந்த நாய்குட்டி கூட்டத்திற்கு மத்தியில் குதித்துள்ளது.
கூட்டத்திற்கு மத்தியில் நாய்க்குட்டி உள்ளதை அறிந்த ஆடுகள் அலறி அங்கும் இங்கும் குதித்துள்ளன. உள்ளே ஆடுகள் மத்தியில் சிக்கிய நாய்குட்டியால் வெளியே வரமுடியாமல் திணறியுள்ளது.
ஆடுகளை ஓட்டி வந்த விவசாயி நாய்குட்டியை விரட்டியுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு நாய்க்குட்டி உரிமையாளரிடம் சென்றடைகிறது. ஆனால், நாய்குட்டி வெளியேறியதும் அங்கு 12 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்துள்ளதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனினும், உயிரிழந்த எந்த ஆட்டையும் நாய்குட்டி கடிக்கவில்லை. நாய்குட்டி உள்ளே புகுந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த 12 ஆடுகளும் உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.
ஆடுகளுக்கு பீதியுடன் அதிர்ச்சியை நாய் ஏற்படுத்தியதால் தான் ஆடுகள் உயிரிழந்தன என குற்றம் சாட்டிய விவசாயி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.வழக்கை விசாரணை செய்தபோது நாய்குட்டியின் உரிமையாளர் விவசாயின் புகாரை மறுத்துள்ளார்.
ஆடுகளுக்கு ஏற்கனவே உளைச்சலும், ஒருவித மன வியாதியும் இருந்ததால் தான் அவைகள் உயிரிழந்து விட்டன. இதற்கும் தனது நாய்குட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லைஎன உரிமையாளர் வாதிட்டுள்ளார்.
நாய்குட்டியுடன் சென்ற பேரப்பிள்ளை பேசியபோது, ‘ஆடுகள் கூட்டத்திற்குள் நாய் நுழைந்தவுடன் விவசாயி நாயை இரும்பு கம்பியால் அடித்து விரட்டியுள்ளார். அப்போது, அவர் நாயை அடிப்பதற்கு பதிலாக ஆடுகளையும் அடித்துள்ளார். இதனால் தான் ஆடுகள் உயிரிழந்தனஎன வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், இவ்வழக்கில் பல்வேறு சந்தேக முடிச்சுகள் உள்ளதால், புகாரை நிரூபிக்க கூடுதல் ஆதரங்களை ஒப்படைக்குமாறு இருதரப்பினருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

Related posts: