US – AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) நிதி உதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) இலங்கைக்கான பணிப்பாளர் ரீட் ஜே. ஈஷ்லிமனுக்கும் (Reed J. Aeschliman) இடையில், இடம்பெற்ற சந்திப்பின் போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் USAID நிதியுதவியின் மூலம் தற்போது நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில திட்டங்கள், பல்வேறு காரணங்களுக்காகச் செயலற்றுக் காணப்படுகின்றன. இதற்கு ஏதுவான காரணங்கள் தொடர்பில் கண்டறிந்து, அத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்துக்கு ஏற்ப, நாட்டில் பாரிய அபிவிருத்திச் செயன்முறை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, USAID உதவிகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி இதன்போது ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) இலங்கைக்கான பணிப்பாளரிடம் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 6 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய கொவிட் தொற்றொழிப்புக்கான மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் அண்மையில் இலங்கையை வந்தடைந்தது. குறித்த உதவிகளுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி கொவிட் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இலங்கைக்கான பணிப்பாளர் ரீட் ஜே. ஈஷ்லிமனிடம் இதன்போது விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: