O/L அனுமதி அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? 29 வரை கால அவகாசம்!

Wednesday, November 23rd, 2016

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் மாற்றங்களை செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, பாடசாலை மூலம் தோற்றும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கும், தனியார் பரீட்சார்த்திகளுக்கு அவர்களது முகவரிக்கும் குறித்த அனுமதிப் பத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக அனுமதிப் பத்தரம் கிடைக்கப் பெறாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள், அனுப்பி வைத்த விண்ணப்பத்தின் பிரதி, பரீட்சைக் கட்டணம் கட்டிய ரசீதின் பிரதி உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு, அவர் கோரியுள்ளார்.

அத்துடன், பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமாயின் அதனை அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனுப்பி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களில் உள்ளடக்கத் திருத்தம், மொழி மூலத் திருத்தம் போன்ற ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பின் பாடசாலை மாணவர்களாயின் அதிபர்கள் மூலமும், தனியார் பரீட்சார்த்திகளாயின் தாமும் நவம்பர் 29ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911க்கு, அல்லது பாடசாலை பரீட்சைகள் அமைப்புக் கிளையின் 011 2 78 42 08, 011 2 78 45 37, 011 31 88 350 மற்றும் 011 31 40 314 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

examination_department

Related posts: