G77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம்!

Thursday, September 7th, 2023

“G77குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ளது.

கியூபா ஜனாதிபதி மிகயெல்  டயஸ்-கனெலின் (Miguel Diaz-Canel)  உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “G77 மற்றும் சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த அரச தலைவர் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கை மற்றும் கியூபா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.

“G77 மற்றும் சீனா” நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடானது ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுக்கு அமைய வளர்ந்து வரும் 134 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய அரசுகளுக்கிடையேயான குழுவாக கருதப்படுகிறது. மேலும் இது தென்பிராந்திய  நாடுகளுக்கு அவற்றின் கூட்டுப் பொருளாதார நலன்களை வெளிப்படுத்தவும், அவர்களின்  பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மற்றும் கூட்டு பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கான திறனை மேம்படுத்தவும் வாய்ப்பை வழங்குகிறது.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் உள்ள சமகால சவால்களை மதிப்பிடுவதற்கும், அதிக பலன்களை அடைவதற்கான கூட்டுத் தீர்வுகளை ஆராயவும், குறிப்பாக தென் பிராந்திய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம், வளர்ந்து வரும்  நாடுகள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை ஆராயவும் இந்த மாநாட்டின் ஊடாக  மேலும் வாய்ப்பு ஏற்படும்.

அதன்படி, இந்த உச்சிமாநாட்டில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பை உருவாக்க தென் பிராந்திய  நாடுகளில் மறுசீரமைப்புகள் மற்றும் புதிய அணுகுமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் ‘ஹவானா பிரகடனத்தை’ அரச தலைவர்கள்  நிறைவேற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள்  ஆகியோர்  பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: