57,000 பேரையும் அரச சேவையில் உள்ளீருங்கள் – வரும் 8 ஆம் திகதி பட்டதாரிகள் போராட்டம்!

Friday, May 4th, 2018

வேலை கோரும் பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேரும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்பட வேண்டும். அதுவே அரச தலைவர் சிறிசேனவும், தலைமை அமைச்சர் விக்கிரமசிங்கவும் எமக்கு வழங்கிய உறுதிமொழி. அதனை வலியுறுத்தி எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இவ்வாறு வேலை தேடும் பட்டதாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைக்கும் நேர்முகத் தேர்வில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.

கோரப்பட்ட தகுதி நிலைகளின் அடிப்படையில் சுமார் 20 ஆயிரம் பட்டதாரிகளே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனம் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. அது தொடர்பிலேயே வேலை தேடும் பட்டதாரிகள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

வேலைதேடும் பட்டதாரிகள் அனைவரும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும் நடைபெற்று முடிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான நேர்முகத் தேர்வில் தோற்றிய சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகளில் 20 ஆயிரம் பேருக்கே பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்படும். பட்ட மேற்படிப்பு முடித்தோருக்கு மேலதிக புள்ளிகள் உள்ளிட்ட நிபந்தனைகளை அரச தலைவரும் தலைமை அமைச்சரும் எமக்கு வழங்கிய உறுதிமொழியில் தெரிவிக்கப்படவில்லை. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட பின்னரே நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அரசின் அந்த கண்துடைப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. பட்டதாரிகள் அனைவரும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்பட வேண்டும் என்று பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 8 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.

Related posts: