புட்டியில் ஊற்றிக் கொடுக்கும் பாலைக்கூட குடிக்க முடியாதவர்கள் வடமாகாண சபையினர் – அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா!

Tuesday, January 17th, 2017

வட மாகாண சபையில் நான் குறைபாட்டை காண்கின்றேன். நீங்கள் அதிகமாக அதிகாரம் வேண்டும் என கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால் உங்களுக்கு வழங்கிய அதிகாரங்களை கூட நீங்கள் சரியான நேரத்தில் பயன்படுத்தியதாக இல்லை என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியா மத்திய பேருந்து நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

ஜனாதிபதி தலைமையில் இராணுவத்திடம் இருந்து பல காணிகள் விடுவித்து தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த விடுவிக்கப்பட்ட காணிகளில் ஏதாவது பயன்படக்கூடியவகையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?.

இரண்டு மில்லியன் ரூபா ஒரு வீட்டுக்கு என ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் பணத்தை ஒதுக்கி தந்துள்ளது. வீடுகளை கட்டினீர்களா? இது எங்களுக்கு பாரிய பிரச்சனை. பால் போத்தலை கேட்கின்றனர். பால் கொடுக்கின்றோம். ஆனால் அவர்கள் பாலை குடிக்கின்றார்கள் இல்லை.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் சிறுபான்மை இனத்திற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என செயற்படும் அரசாங்கம். ஆகவே அந்த அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் பிரயோசனங்களை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய பகுதியில் உள்ள பிரச்சனையை நீங்கள் தீர்த்துக்கொள்ளுங்கள்.

அனைத்து மாகாணங்களிலும் கூட மாகாணங்களுக்கிடையிலான செயற்றிட்டங்களை கொண்டு வந்து செயற்படுத்துகின்றனர். ஊவா மாகாணத்தில் கூட அது தாமதமாகி அண்மையில் செயற்படுத்தியிருந்தனர். இவை மாகாண ரீதியில் செய்யப்பட வேண்டடிய விடயங்கள்.

வட மாகாணசபைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வட மாகாணசபைக்கு பாரிய பொறுப்புள்ளது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்யவேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி கொடுக்கவேண்டும்.

வட மாகாண சபைக்கு தேவையான அத்தனை விடயங்களையும் நாம் நிறைவேற்றி தருவோம். அதற்கு தயாராக இருக்கின்றோம். இந்த மேடையிலும் அனைத்து கட்சியினரும் இருக்கின்றார்கள். இது மக்களின் சேவைக்காக ஒன்றுபட்டுள்ளோர். ஆனால் தேர்தல் காலங்களில் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவோம்.

வடக்கு கிழக்கு ஒரு காலகட்டத்தில் பிரிக்கப்பட்டது மாத்திரமல்லாது போர்ச்சூழலும் காணப்பட்டது. அது அதிகாரத்தை பகிர்வது தொடர்பிலானதாக இருந்தது. அதற்கு ஓர் குறியீடாக இந்த பேருந்து நிலையமும் உள்ளது.

போக்குவரத்து துறையிலும் தமது அதிகாரத்தை காட்டுவதற்காக சிலர் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அதுதான் தனியார் பேருந்து சங்கமும் இலங்கை போக்குவரத்து சபையுமாக உள்ளது,

ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளும் அரசாங்க இராணுவமும் போரிட்டது போல் இன்று தனியார் பேருந்து உரிமையாளர்களும் இலங்கை பேருந்து சபையினரும் மோதுகின்றனர். இவர்கள் கீரியும் பாம்பும்போல் சண்டை பிடிக்கின்றனர்.

இன்று நாட்டில் போர் முடிந்து விட்டது. எனவே இவர்களுடைய சண்டையும் முடியும் காலம் வந்துவிட்டது. கடந்த கலங்களில் இ.போ.ச பேருந்துகளுக்கு கல் எறிந்து பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது போன்று போக்குவரத்து சேவையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

இரு பேருந்து சேவையினரும் தாங்கள் நினைத்தபடி செற்பட முடியாது இணைந்த நேர அட்டவணையின் பிரகாரமே செயற்படவேண்டும். வட மாகாணத்தில் சமாதானத்தை ஏற்படுத்தியது போன்று வட மாகாணத்தில் உள்ள பேரூந்து சேவையிலும் சமாதானமும் சகவாழ்வும் ஏற்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றறேன்.

இதற்கு விசேடமாக பொலிஸாரின் ஒத்துழைப்பு அவசியம். வட மாகாணசபையின் ஒத்துழைப்பு அவசியம். அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். அனுமதி அற்ற பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றது. அவர்களை பிடித்து தண்டம் அறவிட்டால் மீண்டும் சேவையில் ஈடுபடுகின்றனர்.

எனவே இவ்வாறானவர்களை கட்டுப்படுத்த 2 இலட்சம் ரூபா அபராதம் அறவிடப்பட வேண்டும் என அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் அது நடைமுறைக்கு வரும் அதன் பின்னர் சட்ட ரீதியாக அமுல்ப்படுத்தப்படும்.

மக்கள் தமக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும் என்ற உரிமை இருக்கவேண்டும். இ.போச பஸ்சில் செல்ல இருப்பவரை தனியார் பேருந்திலும் தனியார் பேரூந்தில் செல்ல இருப்பவரை இ.போசவிலும் ஏற்ற முடியாது.

இதற்கு பேரூந்து நிலையங்களில் உள்ள தரகர்களே காரணமாக உள்ளனர். எனவே இவர்களை கட்டுப்படுத்த பொலிஸாரும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரும் இணைந்து செயற்படவேண்டும். அதேவேளை புகையிரத சேவையினையும் நாம் நவீன மயப்படுத்தி வருகின்றோம்.

ஓமந்தையில் இருந்து அனுராதபுரம் வரையான புகையிரத பாதைகள் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக சேவைகள் தடைப்படலாம். இல்லாவிட்டால் சரியான தரத்திற்கு அதனை புனரமைப்பு செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 nimal

Related posts: