50 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு புலமைப்பரிசில்: யாழ். படைத் தலைமையகம் !

Tuesday, January 23rd, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை உணர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என பாதுகாப்பு படைகளின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கன்சோ சிறிலங்கா ஜனகட என்ற நிறுவனத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வறுமைக் கோட்டுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் 5 000 ரூபா வீதம் ஐந்து வருடங்களுக்குப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்:

யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் வடக்கு, தெற்கு மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும், சினேகபூர்வமாகவும் வாழ்ந்து வந்தோம். விடுமுறையின் போது வடக்கு மக்கள் தெற்குக்கும் தெற்கு மக்கள் வடக்குக்கும் சினேகபூர்வமான பயணங்களை மேற்கொண்டிருந்தோம். அதேவேளை யுத்தத்திற்கு பின்னர் தற்போதும் அவ்வாறான சமத்துவ நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து விட்டது. இனியும் அந்த சம்பவங்களை நினைத்து வருந்தாமல், அதன் பாதிப்புக்களை நினைத்து எமது சகோதர தொடர்புகளை இழக்காமல் இனிவரும் காலத்தில் சகோதரத்துவத்துடன் காலத்தை இனிமையாக மாற்ற வேண்டும்.

முன்னைய காலத்தில் இருந்த வைத்தியர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பல்வேறு துறைகளில் பெரிய பதவிகளில் இருந்தவர்கள் பலர் தமிழ் இனத்தை சார்ந்தவர்கள் தான்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கு எந்த வழியில் உதவ முடியுமோ அந்த வழியில் உதவிகளை மேற்கொள்வோம்.

எமது நாட்டிலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கல்வியில் பின்தங்கிய பிள்ளைகளை கல்விக்கான உதவிகளை வழங்கி அவர்களை கல்விமான்களாக உருவாக்குவதன் மூலம் நாட்டில் மீண்டும் ஓர் யுத்தம் நிகழாமல் இருப்பதற்கு வழிகோலமுடியும்.

எமது நாட்டில் தீமைகள் இடம்பெறாது இருக்க இளையவர்களின் கல்வியை மென்மேலும் வளர்ப்பதற்கு நாம் பல உதவிகளை செய்து வருகிறோம். மாணவர்கள் தமக்கு கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி கல்வியில் முன்னேறி நாட்டின் ஒற்றுமைக்கு உதவ வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்றதைப் போன்ற யுத்தம் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Related posts: