5 ஆம் திகதிமுதல் தடையின்றிய மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, March 1st, 2022

மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் தடையின்றி மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் ஐந்து நாட்களின் பின்னர் மின் தடை செய்வதனை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போக்குவரத்து மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் மார்ச் மாத இறுதிக்குள் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புகையிரத மற்றும் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நீக்கி போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. இது குறித்து எதிர்காலத்தில் விரிவாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதேநேரம் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்தும் அமைச்சரவை யில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனிடையே தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளன. புகையிரத திணைக்கள களஞ்சியசாலைகளிலும் எரிபொருளை சேமிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: