41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்!

Wednesday, December 13th, 2023

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

குறித்த 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்றில் 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்படது

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதேவேளை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கும் இன்றைய தினம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது பாதீட்டின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் வழங்கப்பட்டன. இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் மாலை 6.40 அளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாதீட்டை ஆதரித்து வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது.

தேசிய மக்கள் சக்தியும் எதிராகவே வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பாதீட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்தது.

அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க, பாதீட்டுக்கு எதிராகவே வாக்களித்தார். வடிவேல் சுரேஷ் இரண்டாம் வாசிப்பை போன்று பாதீட்டை ஆதரித்தே வாக்களித்தார்.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

14ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாக வாக்களித்தது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை எதிராக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதிவரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: