இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டம் – இலங்கை – இந்திய எல்லை வரை சென்ற யாழ் மாவட்ட மீனவர்கள்!

Sunday, March 3rd, 2024

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்திய எல்லை நோக்கி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள் இன்றையதினம் சென்றிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இலங்கை கடல் பரப்புக்குள்  எல்லை மீறி வரும் இந்திய இழுவைப் படகுகள், இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய – இலங்கை கடல் எல்லைக்குச் சென்று கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

குறிப்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனம் மற்றும் யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

எல்லைதாண்டும் இந்திய இழுவை படகு மீன்பிடியாளர்களுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டமானது யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு முதல் வடமராட்சி கிழக்கு வரையான கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் உபகரணங்களை அழித்து வந்தவேளை, எமது கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த கடற்றொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், இந்திய அரசாங்கம், அந்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு எமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதை ஏற்கமுடியாது

எமது வளங்களை அழித்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும் என்பதே எமது கேள்வியாக உள்ளது. அதேநேரம் எமது வளங்கள் பல தசாப்தகாலமாக அழிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான நியாயம் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் எமது வளங்களை சூறையாடி பிழைப்புகளை நடத்தியவர்கள், தங்களது கடற்றொழிலாளர்களை எமது அரசாங்கம் பிடித்து வைத்துள்ளபோது அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

ஆனால் ஒரு வினாடி கூட இழுவைப்படகுகள் எமது நாட்டின் எல்லைக்குள் மீன்பிடியிலீடுபட அனுமதிக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. அதேநேரம் எமது அரசாங்கமும் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய கூடாது என்பதும் போராட்டகாரர்களில் வலியுறுத்தலாக உள்ளது

அத்துடன் இந்த கறுப்புக்கொடி போராட்டமானது யாழ் மாவட்ட கடற்றொழில் சார் மக்கள் சார்பாக அவர்களது நலன்களையும் தொழில் பாதுகாப்பையும் முந்நிறுத்தி முன்னெடுக்கப்ட்டமையால் இந்திய இழுவை படகு மீன்பிடியாளர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான எமது முழுமையான எதிர்பாக இது காட்டப்படுகின்றது அத்துடன அந்த அத்துமீறுமு; தொழிலை முன்னெடுப்பவர்களுக்கு கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு செய்தியாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை இலங்கை மீனவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதால், மீனவர்களது பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதி சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: