35 அடியை எட்டியது இரணைமடுக் குளம்!

Thursday, December 6th, 2018

வடக்கின் மிகப் பெரிய குளமான இரணைமடுவில் தண்ணீர் மட்டம் 35 அடியைத் தொட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பெரியளவிலுள்ள 10 குளங்களிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இரணைமடுக்குளம் உள்ளடங்குகின்றது. அது 34 அடி கொள்ளளவாக இருந்தபோதும் அணைக்கட்டின் பாதுகாப்புக் கருதி 33 அடி உயரம் வரையிலேயே இதுவரை காலமும் தண்ணீர் தேக்கப்பட்டது. குளத்தின் சீரமைப்புப் பணியின்போது அணைக்கட்டு மேலும் உயர்த்தப்பட்டு தற்போது 36 அடி உயரம் வரை தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.

கிளிநொச்சியில் பெய்யும் மழை காரணமாக அங்கு தற்போது 35 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கின்றது.

குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறந்து விடப்படும் என்று சிலர் கதைகளைப் பரப்பி வருகின்றனர். இந்த மாவட்டத்தின் விவசாயிகளின் நன்மை கருதி இந்த ஆண்டு 36 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கப்பட்டே தீரும். அதுவரை தண்ணீர் திறக்கப்பட மாட்டாது.

தண்ணீர் திறந்து விடப்பட முன்னர் அது பற்றிய அறிவிப்பு விடுக்கப்படும் என்றார்.

இதேநேரம் மாவட்டத்தின் ஏனைய குளங்களான அக்கராயன் குளம், கல்மடுக் குளம், கரியாலைநாகபடுவான் குளம், முறிப்புக்குளம், பிரமந்தனாறுக்குளம், குடமுறிட்டிக்குளம், வன்னேரிக்குளம் ஆகியவற்றோடு கனகாம்பிகைக்குளமும் நிரம்பியுள்ளன. அதனால் இந்த ஆண்டு சிறுபோக நெற் செய்கையில் விவசாயிகள் முழுமையாக ஈடுபட முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்றார்.

முன்னர் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிறுபோகச் செய்கை மேலதிகமாக இடம்பெற அனுமதிக்கப்படவில்லை. நெல் விதைத்து வளர்ந்த பின்னரும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக கடந்த வருடம் வயல்கள் அழிந்து போயின.

Related posts:


புதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின்...
நாட்டில் தீவிரமடையும் டெல்டா - சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேரா...
சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!