21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சாதகமாகவே உள்ளது. அது அவருக்கு பாதகமானதாக இல்லை. எனவே அவர் அதனை ஆதரிப்பார் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி நிறைவேற்றதிகாரங்களை குறைத்துக் கொள்வதற்கு தயார் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில் –

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் ஊகிக்கின்றேன்.

21 ஆவது திருத்தம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்ட போது அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு தான் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அத்தோடு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் இன்னும் அவருக்கு சாதகமாகவே உள்ளது, பாதகமாக இல்லை.

முன்னதாக 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அமைச்சரவையில் தற்போது முன்வைக்கப்பட்ட வரைபுக்கு பாரிய பாதகமான எதிர்ப்புக்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் என்னைச் சந்தித்திருந்தனர்.

ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்திருந்தனர். ஆனால் அந்த வரைவு அதே நாளில் அமைச்சரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற கடைசி நேரத்திலேயே குறித்த ஆவணம் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டது.

எனவே அது தொடர்பில் அன்றையதினம் விரிவாகக் கலந்துரையாடப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்வதற்கு  அமைச்சர்கள் மேலதிக கால அவகாசம் கோரியுள்ளனர். 21 ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று நான் நம்புகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: