2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!

Wednesday, December 9th, 2020

2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை வழங்குவதே எமது இலக்காகும். அதனை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சின் 2021 ஆம் ஆண்டிற்கான எதிர்காலத் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வு கூட்டம் நீர்வழங்கல் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் தேவைக்கேற்ப தடையின்றிய நீர் வழங்கல் மற்றும் புதிய நீர் இணைப்புக்களுக்காக ஒப்பந்தக்காரர்களுக்காக செலுத்தப்படவிருந்த நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில மாதங்களில் மட்டும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஒப்பந்தக்காரர்களுக்கு 35 மில்லியன் ரூபாய் செலுத்தி இருக்கின்றது.

எமது திட்டங்களில் உள்ளூர் திறன்களை இணைத்து உள்ளூர் ஒப்பந்தக்காரர்களை இணைத்துக்கொள்வதே எமது நோக்கமாகும்.

உரிய தரத்தை பூர்த்தி செய்து உயர்தர சேவையை வழங்கும் ஒப்பந்தக்காரர்களை நாங்கள் எப்போதும் பாதுகாக்கிறோம், எமது கொடுப்பனவுகளில் ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டு ஒப்பந்தக்காரர்களை நஷ்டமடைய அனுமதிக்க மாட்டோம்.

எவ்வாறாயினும், எமது திட்டங்களை பணயக்கைதிகளாக வைத்திருக்க ஒப்பந்தக்காரர்களுக்கு இடமளிக்கமாட்டோம். அவர்களின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிசாய்க்க தாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நீரை வழங்குவதே எமது தேவையாகும். இதற்காக, இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட எமது அனைத்து அதிகாரிகளும் முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பணியாற்றி வருவதுடன், 2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை வழங்கும் எமது முதன்மை நோக்கத்தை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம், என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: