2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
அத்துடன் இதற்காக ஆறுகள் நீர்நிலைகள் மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதேசங்களை சுத்தம் செய்து புனர்நிர்மாணம் செய்வதற்கு விசேட கவனத்தை செலுத்தி இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘அனைவருக்கும் நீர்’ சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதியாகும்.
அந்தவகையில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் 47 இலட்சம் குடும்பங்களுக்கு நீரை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளின் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதோடு அதற்காக 40 ஆயிரம் கிலோமீற்றர்கள் நீர் குழாய்கள் புதிதாக பதிக்கப்படவுள்ளது.
அத்துடன் இதுவரை நீர்வழங்கலுக்கு செலவிடப்பட்ட செலவினங்களில் அரைவாசி நிதியை பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. நீரோடைகள் நீரூற்றுக்களை இனங்காணல் அவற்றை அபிவிருத்தி செய்தல் இவ்வேலைத்திட்டத்தின் படிமுறைகளாகும். நீரூற்றுக்களை பாதுகாப்பதற்காக மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் நீர் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி தனது அவதானத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|