20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு – மூன்று வருடங்களுக்கு வழங்க திட்டம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023

நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நான்கு பிரிவுகளின் கீழ் 20 இலட்சம் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்காக இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், மிக மோசமாக வறுமை நிலையிலுள்ள 4 இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருட காலங்களுக்கு 15 ஆயிரம் ரூபா வீதம் மாதாந்தம் நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வறுமைக் கோட்டின் கீழ் இனங்காணப்பட்டுள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தம் 8,500 ரூபா படி நிவாரணமும் நிவாரணத்துக்கு தகைமையுடையோராக கவனத்திற்கொள்ளப்பட்டுள்ள 4 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும்  வருடம் மார்ச் மாதம்வரை மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வறுமை நிலைத் தரப்படுத்தலின் கீழ் 4 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதிவரை மாதாந்தம் 2,500 ரூபா நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிவாரணங்கள் வழங்கப்படும் காலம் மற்றும் அதற்குள் உள்ளடக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது தொடர்பிலான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளதாகவும் இக்காலங்களுக்குள் அவர்களை பொருளாதாரத்தில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலக வங்கியின் அறிக்கைக்கு இணங்க எமது நாட்டு அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் மூலம் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வோரில் 12 வீதமானோர் அதிக வருமானம் பெறுவோர் என்பது தெளிவாகிறது என்றும் அதனை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: